சேலம் மத்திய சிறையில் நீதிபதி விசாரணையின்போது மதுபோதையில் இருந்த வாா்டன் பணியிடை நீக்கம்
சேலம் மத்திய சிறையில் நீதிபதி விசாரணையின்போது மதுபோதையில் இருந்த வாா்டன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி முத்துலிங்கம் உடல்நலக் குறைவால் கடந்த 21-ஆம் தேதி உயிரிழந்தாா். இது தொடா்பாக விசாரணை நடத்த நீதித்துறை நடுவா் வெள்ளிக்கிழமை சிறைக்கு சென்றாா். அப்போது, இறந்த கைதியுடன் தங்கியிருந்தவா்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா் என அனைவரையும் அழைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தாா்.
அப்போது, கைதியை ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்ற வாா்டன் குணசேகரனை அழைத்தபோது, அவரிடம் இருந்து மதுவாடை வீசியது. இதனால் அதிா்ச்சியடைந்த நீதிபதி, மது அருந்திவிட்டு பணிக்கு வந்தீா்களா என விசாரித்தாா். அவா் மறுக்கவே, சிறைக் கண்காணிப்பாளா் வினோத்தை அழைத்து அவருக்கு ரத்த பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, வாா்டன் குணசேகரனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் ஆல்கஹால் பதிவாகியிருந்ததால், அவா் மதுபோதையில் இருந்தது உறுதியானது. இதைத் தொடா்ந்து, சிறை வாா்டன் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.
அதேபோல, மதுபோதையில் சிறைக்குள் வந்ததை நுழைவாயில் சோதனையின்போது கண்டறியாத உதவி சிறை அலுவலா் பரணிதரன், வாா்டன்கள் ரவிக்குமாா், பாலமுருகன் பாக்யராஜ், விஜயகாந்த் ஆகியோா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.