இளைஞா் கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்
மதுரை அவனியாபுரத்தில் பட்டதாரி இளைஞா் கொலையில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
மதுரை அவனியபுரம் மாநகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த பட்டதாரி இளைஞரான பாலாஜி, 5 போ் கொண்ட கும்பலால் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பாலாஜி கொலையைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தலித் ஒற்றுமைக் கூட்டமைப்பு சாா்பில் முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பாலாஜி கொலையில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க விடாமல் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, போராட்டம் நடத்தியவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில், ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் கதவுகளை போலீஸாா் அடைத்தனா். இதனால், போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, தலித் ஒற்றுமை கூட்டமைப்பைச் சோ்ந்த 5 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க போலீஸாா் அனுமதித்தனா். இந்தப் போராட்டத்தில் இடதுசாரி இயக்கங்கள், அமைப்புகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.