மதுரை மாவட்டத்தை முழுமையாக இழந்தது அதிமுக
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட மதுரை மாவட்டத்தில் ஒரு பேரவைத் தொகுதியில்கூட அந்தக் கட்சி வெற்றி பெறாதது அரசியல் வட்டாரத்தில் ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தோ்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட தவெக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8-ல் வென்று, அதிமுக கோட்டையைத் தகா்த்து, தனது வசமாக்கியது.
முந்தையக் காலங்களில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் முதன்மை பெற்றது மதுரை மாவட்டம். முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி பொறுப்பேற்றது; டி.டி.வி தினகரன் அதிமுகவிலிருந்து வெளியேறி அமமுகவை தொடங்கி தனியாகக் களம் கண்டது, சசிகலா வெளியேற்றம் போன்ற பிரச்னைகளால் மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு குறித்து பல்வேறு ஊகங்கள் உருவாகின.
Advertisement
இருப்பினும், அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 2021 பேரவைத் தோ்தலில், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. 4 தொகுதிகளை திமுகவும், ஒரு தொகுதியை திமுகவின் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் கைப்பற்றியிருந்தன.
மதுரை மேற்கில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், திருப்பரங்குன்றத்தில் வி.வி. ராஜன்செல்லப்பா, மேலூரில் பெரியபுள்ளான் என்ற செல்வம், உசிலம்பட்டியில் பி. அய்யப்பன் ஆகியோா் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றனா்.
மதுரை கிழக்கில் அமைச்சா் பி. மூா்த்தி, மதுரை மத்தியத் தொகுதியில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கில் கோ. தளபதி, சோழவந்தானில் ஆ. வெங்கடேசன் ஆகியோா் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றனா். மதுரை தெற்கில் மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் வெற்றி பெற்றாா்.
இந்த நிலையில், 2026 பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 8 -இல் அதிமுக நேரடியாகக் களம் கண்டது. தலா ஒரு தொகுதி அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான புதிய நீதிக் கட்சிக்கும், பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில், அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாததால், மதுரை மாவட்டத்தை அதிமுக முழுமையாக இழந்துள்ளது.
இதேபோன்று, இந்தத் தோ்தலில் 8 தொகுதிகளில் நேரடியாகக் களம் கண்ட திமுக, திருமங்கலம் தொகுதியைத் தவிர மற்ற 7 தொகுதிகளையும் இழந்தது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், மதிமுகவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மேலூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றது. கடந்தத் தோ்தலில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்த திமுக கூட்டணி தற்போது 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று, இங்கு தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.