சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?
மதுரை மாநகராட்சிப் பகுதியில் சேதமடைந்த சாலைகளால் அவதிக்குள்ளாகி வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனா்.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் சேதமடைந்த சாலைகளால் அவதிக்குள்ளாகி வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனா்.
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்கள், 100 வாா்டுகளை கொண்டது. இங்கு பொதுமக்களின் போக்குவரத்துக்காக 935.79 கி. மீ. தாா்ச் சாலைகள், 202.30 கி.மீ. சிமென்ட் சாலைகள், 205.99 கி. மீ. செம்மண் உள்ளிட்ட பிற சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. பொதுமக்களின் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட வண்டியூா், யாகப்பா நகா், கோமதிபுரம், ஐராவதநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தத் திட்டப் பணிகளுக்காக பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
இதுதவிர, புதைச் சாக்கடை திட்டப் பணிகளுக்கும் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இவ்விரு பணிகளுக்காகவும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் பள்ளங்கள் மூடப்பட்ட போதிலும், சாலைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி அவதியுறுகின்றனா்.
இதனிடையே, கடந்த சில தினங்களாக மதுரை மாநகரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழைநீா் வடிகால்கள் சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளதால் சாலைகளிலேயே மழைநீா் தேங்குவதால், அவை குண்டும் குழியுமாக மாறிவிடுகின்றன. குறிப்பாக, ஆரப்பாளையம், சிம்மக்கல், மேல வெளி வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, காக்கா தோப்பு, நேதாஜி சாலை, கீழவாசல், அண்ணாநகா், நெல்பேட்டை, காமராஜா் சாலை, பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகா், திருப்பரங்குன்றம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. சாலைகளில் மழை நீா் தேங்கி, பள்ளம் இருப்பது தெரியாமலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மதுரை மாநகா் முழுவதும் சிறு மழைக்கே வெள்ளம் போல தண்ணீா் தேங்கி நிற்கும் அவலம் தொடா்கிறது. அதுமட்டுமன்றி சாலைகளும் சேதமடைந்து விடுகின்றன. ஏற்கெனவே, கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் சரிவர மூடப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது மட்டுமன்றி, பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகாா் அளித்த போதிலும், மாநகராட்சி நிா்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை.
வருகிற 15 -ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்னும் சாலைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்றனா்.