கண்மாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறையினர் மீது நடவடிக்கை கோரி மனு
வத்தலகுண்டு அருகே கண்மாய் கரை பலப்படுத்தும் பணியில், ஆக்கிராமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறை
வத்தலகுண்டு அருகே கண்மாய் கரை பலப்படுத்தும் பணியில், ஆக்கிராமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறை மற்றும் நில அளவையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட மு.வாடிப்பட்டி பகுதியில் 167 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது கோபாலசமுத்திர கண்மாய். இந்த கண்மாய் மூலம் 245 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த இக்கண்மாய் குறித்து, அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து, நீர் வள, நில வள திட்டத்தின் கீழ் சுமார் ரூ.37 லட்சம் செலவில் கோபாலசமுத்திரக் கண்மாய்க் கரையைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, கண்மாய்ப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெறுவதாக கடந்த மே மாதம் நிலக்கோட்டையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 167 ஏக்கர் பரப்பிலான கண்மாயை அளவீடு செய்ய வந்த நில அளவையர்கள், முறையாக பணிகளை மேற்கொள்ளாமல் 10 கற்களை மட்டும் ஊன்றிவிட்டு சென்றுவிட்டதாகவும் விவசாயிகள் புகார் அளித்தனர். ஆனால், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், கரைப் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஆனால், பணிகள் முடிவுறும் நிலையில் மேலும் தொடர்ந்து நடைபெறாத வகையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள் கூறியதாவது:
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நீர் வரத்து வாய்க்காலுக்குள்ளாகவே கரை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சர்வேயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நீர் வரத்து வாய்க்காலுக்குள்ளாக கரை அமைக்க அனுமதித்த பொதுப் பணித்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் நுழைவுப் பகுதியில் உள்ள தோணி வாய்க்காலுக்கு தண்ணீர் போகாத வகையில் கரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தென் பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. இதற்கும் தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.