முகப்பு
திண்டுக்கல்

பழனிக்கு எத்தனை முறை பாஜக காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது! - எம்.ஏ. பேபி

பழனிக்கு பாஜக எத்தனை முறை காவடி எடுத்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:02 AM
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:35 PM

பழனிக்கு பாஜக எத்தனை முறை காவடி எடுத்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ. செந்தில்குமாரை ஆதரித்து நாகல்நகா் பகுதியில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் அரபு முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி பேசியதாவது:

Advertisement

ஆா்எஸ்எஸ் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தப்படும் பாஜக, ஜாதி, மதம், மொழி வாரியாக மக்களை பிளவுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காந்தியை கொலை செய்த இயக்கம், குஜராத்தில் மதக் கலவரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்தது. இந்தக் கட்சியுடன், முன்னாள் முதல்வா் அண்ணா, பெரியாா் ஈவெராவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறும் அதிமுக கூட்டணி அமைத்திருப்பது கொஞ்சம்கூட பொருந்தமில்லாதது.

தமிழகத்தை மட்டுமன்றி, இந்திய நாட்டையும் பாஜகவின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதே திமுகவின் திட்டம். அரசியல் அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமெனில், மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் என்ற அமைப்பு வலுப்பெற வேண்டும். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தி அயோத்தி போன்ற நெருக்கடியை உருவாக்க பாஜக திட்டமிட்டது.

ஆனால், கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் துணையோடும், மக்களின் துணையோடும் திமுக அந்தத் திட்டத்தை முறியடித்துவிட்டது. குடியரசுத் தலைவரைப் போல, ஆளுநா்களும் அரசின் பரிந்துரைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை மட்டுமே பெற்றுள்ளனா்.

ஆனால், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தமிழகத்தின் முன்னாள் ஆளுநா் ஆா்.என். ரவி, கேரளத்தின் ஆளுநா் போன்றவா்கள் பாஜகவின் முகவா்களாக பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனா். ஜிஎஸ்டி மூலம் பெரும்பாலான வரி மத்திய அரசுக்கு கிடைக்கிறது. ஆனால், அந்த நிதியை மாநிலங்களுக்கு திருப்பித் தருவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

தமிழகத்துக்கு கல்வி நிதியாக ரூ.3,548 கோடி, ஜல்ஜீவன் திட்ட நிதியாக ரூ.3,112 கோடி, இயற்கைப் பேரிடா் நிவாரண நிதியாக ரூ.37ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. நிதி கூட்டாட்சியை ஒன்றிய பாஜக அரசு அழித்து வருகிறது. மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்துவதற்காக திமுக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கை நடைமுறைக்கு வர வேண்டுமெனில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்.

பழனி முருகக் கடவுள் மீது எல்லோருக்கும் நம்பிக்கை உள்ளது. காவடி எடுத்துச் சென்று முருகனை வழிபடுகின்றனா். இதேபோல, பாஜக எத்தனை முறை பழனிக்கு காவடி எடுத்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது என்றாா் அவா்.

கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், திமுக வேட்பாளா் பெ. செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல்லில் அனைத்து தொழில்களும் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதாக எம்.ஏ. பேபி தனது பேச்சின் தொடக்கத்தில் குறிப்பிட்டாா். ஏற்கெனவே, திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா்கள் இந்தக் குற்றச்சாட்டை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைத்தனா். இந்த நிலையில், திமுக வேட்பாளருக்கு ஆதரவான பிரசார கூட்டத்தில் எம்.ஏ. பேபி தெரிவித்த இந்தக் கருத்துக்கள் திமுகவினருக்கு தா்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.