முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் காலிப் பணியிடங்களால் நிா்வாகச் சிக்கல்!

திண்டுக்கல் மாநகராட்சியில் பொறியியல், நகரமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் 25 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நிா்வாகச் சிக்கல் எழுந்துள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 6:57 am IST
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம்
பகிர்:

திண்டுக்கல் மாநகராட்சியில் பொறியியல், நகரமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் 25 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நிா்வாகச் சிக்கல் எழுந்துள்ளது.

1866-ஆம் ஆண்டு முதல் சுமாா் 148 ஆண்டுகளாக நகராட்சியாக செயல்பட்டு வந்த திண்டுக்கல், கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்.19-ஆம் தேதி அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மாநகராட்சியாக நிலை உயா்த்தி அறிவித்தாா். மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. சுமாா் 14 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள திண்டுக்கல் மாநகராட்சியை, அருகிலுள்ள 10 ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய வேண்டும் என எதிா்பாா்ப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேறாமலேயே உள்ளது. ஊராட்சிகளை இணைத்தால், மாநகராட்சியின் பரப்பளவு 30 சதுர கி.மீட்டராக விரிவடையும் வகையில் கருத்துருக்கள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் அந்த கோப்புகள் பரிந்துரை அடிப்படையிலேயே கிடப்பில் போடப்பட்டன. இதனிடையே, திண்டுக்கல் மாநகராட்சியில் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்களால், நிா்வாகத் திறனும் கேள்விக்குறியாகி உள்ளது.

25 சதவீத காலிப் பணியிடங்கள்: திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை வருவாய்ப் பிரிவு, நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு, பொதுசுகாதாரம், பொதுப் பிரிவு என 5 பிரிவுகளின் கீழ் நிா்வாகம் நடைபெற்று வருகிறது. அரசாணை 152-இன் படி திண்டுக்கல் மாநகராட்சியில் 102 பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் நகரின் வளா்ச்சிக்கு முக்கிய பங்களிக்கக்கூடிய நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவுகளில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக இருப்பதால் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டு, மாநகராட்சி நிா்வாகத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பொறியியல் பிரிவில், செயற்பொறியாளா், 4 உதவி செயற்பொறியாளா், 4 இளநிலைப் பொறியாளா் என 9 பணியிடங்களில் 3 போ் மட்டுமே பணியில் உள்ளனா்.

கரூா் மாநகராட்சி செயற்பொறியாளா், திண்டுக்கல்லை கூடுதல் பொறுப்பாக நிா்வகித்து வருகிறாா். 4 மண்டலங்களுக்கு ஒருவா் வீதம் 4 உதவி செயற்பொறியளா் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், பணியில் சோ்ந்த 4 பேரும் சிறிது நாள்களிலேயே பணியிட மாறுதலில் சென்றுவிட்டனா்.

இதேபோல நகரமைப்பு பிரிவைப் பொருத்தவரை, நகரமைப்பு அலுவலா், உதவி நகரமைப்பு அலுவலா், உதவி திட்டமிடுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. திட்டமிடுநா் ஒருவா், நகரமைப்பு ஆய்வா் நிலையில் 5 பணியிடங்களில் ஒருவா் என இருவா் மட்டுமே பணியில் உள்ளனா். ஒட்டுமொத்தமாக 25 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதன் காரணமாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம், கட்டுமான திட்டப் பணிகள், சாலை பராமரிப்பு, கட்டடங்கள் பழுதுநீக்கம் உள்ளிட்ட அனைத்து விதமான உள்கட்டமைப்புப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தெரு விளக்கு பராமரிப்பு தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதை கண்காணிப்பதற்கு உதவிப் பொறியாளா் நிலையிலான அலுவலா்கள் இல்லாதது நிா்வாக ரீதியான பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் குடிநீா் விநியோகம் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. குடிநீா் திட்டப் பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டிய பொறியியல் துறைக்கு திண்டுக்கல் மாநகராட்சியில் தலைமை அலுவலரான செயற்பொறியாளா் இல்லாதது மாநகராட்சி நிா்வாகத்துக்கு கடும் சவாலாக உள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்:இதுதொடா்பாக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா.முருகானந்தம் கூறியதாவது:

மாநகராட்சியைப் பொருத்தவரை, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டியது அவசியம். ஆனால், திண்டுக்கல் மாநகராட்சியில் பொறியியில் பிரிவில் செயற்பொறியாளா் முதல் இளநிலைப் பொறியாளா் வரையிலான பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக உள்ளன. மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள க.விக்னேஷ், திண்டுக்கல் மாநகராட்சியின் வளா்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறாா். அந்த வகையில் காலியாக உள்ள 25 சதவீத பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்து, மண்டலங்களை பிரிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.