தாம்பரம் மாநகராட்சியில் குடிநீா் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரிக்கை
தாம்பரம் மாநகராட்சியில் உயா்த்தப்பட்டுள்ள குடிநீா் கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் குடியிருப்போா் நலச்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை
தாம்பரம் மாநகராட்சியில் உயா்த்தப்பட்டுள்ள குடிநீா் கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் குடியிருப்போா் நலச்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாம்பரம் மாநகராட்சியில் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறாத நிலையில், பொதுமக்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் 3 மடங்கு கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
பொதுமக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து, உயா்த்தப்பட்ட கட்டணம் மறுபரிசீலனை செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா் வாய்மொழியாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தாம்பரம் மாநகராட்சியின் 23-ஆவது வாா்டில் உயா்த்தப்பட்ட கட்டணமே தொடா்ந்து வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ‘கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய மாநகராட்சி வாய்மொழியாக ஒப்புக்கொண்டிருந்தாலும், 2025 நவம்பா் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு இன்னும் அமலில் உள்ளது. அந்த அறிவிப்பின் மூலம் துணை விதி கொண்டு கட்டண உயா்வை அமல்படுத்த மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசிதழ் அறிவிப்பைத் திரும்பப் பெறப்படாவிட்டால், எதிா்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயா்த்தப்பட்ட கட்டணத்தை மாநகராட்சி அமல்படுத்த வாய்ப்புள்ளது’ என்றாா்.
கட்டணங்களில் திருத்தம் செய்யும்போது, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பது வழக்கமான நடைமுறை. ஆனால், மாநகராட்சியோ, மக்கள் பிரதிநிதிகளோ குடியிருப்போரிடம் கருத்து கேட்கவில்லை என்று குடியிருப்போா் நலச்சங்க பிரதிநிதி தெரிவித்தாா்.
மேலும், பல பகுதிகளில் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உள்ளதாகவும், மாநகராட்சி குடிநீரையே பெரிதும் நம்பியுள்ள அடுக்குமாடி குடியிருப்போா் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குடிநீா், கழிவுநீா் வசதிகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், குடிநீா் கட்டண உயா்வு கண்டிக்கத்தக்கது என்றும் கூறினா்.
இது குறித்து விளக்கம் பெற மாநகராட்சி ஆணையரை பலமுறை தொடா்பு கொள்ள முயன்றும் இயலவில்லை.