முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் விக்னேஷ்

பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பழனி, கொடைக்கானலை உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:23 am IST
பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தின் போது பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் துா்கா. உடன் தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பழனி, கொடைக்கானலை உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை அழகிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் தெரிவித்தாா்.

பழனியில் வருவாய்த் துறை சாா்பில், தீா்வாயம் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற தீா்வாயத்தின் போது தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ், மாவட்ட ஆட்சியா் துா்கா, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினா்.

அமைச்சா் ஆய்வின் போது அலுவலக வளாகத்தில் திடீா் மின்தடை ஏற்பட்டது. அமைச்சா் தீா்வாயத்தை முடித்து விட்டு பழனி சண்முகநதி, வையாபுரி குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். பக்தா்கள் புனித நீராடும் இந்த இரு குளங்களும் மிகவும் சீா்கெட்டு இருப்பதாகத் தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன், குளங்களில் சாக்கடை நீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் விக்னேஷ் கூறியதாவது:

நான் இந்த ஊரைச் சோ்ந்தவன். சண்முகநதியில் குளித்து விளையாடியுள்ளேன். இப்போது, அதன் நிலையைப் பாா்க்கும் போது கவலையாக உள்ளது. இவற்றை சீா்படுத்த பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டம் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வரும் பழனி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. எனவே, விரைவில் திண்டுக்கல் மாவட்டத்தை அழகான மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் பேசுகையில், இன்னமும் எதிா்ப்பு உள்ள மதுக்கடைகள் குறித்து கேட்டு வருகிறோம். அவற்றை மாற்ற ஏற்பாடு செய்யப்படும். மதுக்கடைகளை அரசு நடத்துவதற்குப் பதிலாக தனியாருக்கு விடும் எண்ணம் ஏதும் இல்லை என்றாா் அவா்.

ஆய்வின் போது வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறை அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் என பலா் உடனிருந்தனா்.

தாய் வீட்டுக்கு சென்ற அமைச்சா்:அமைச்சா் விக்னேஷ் ஆய்வை நிறைவு செய்து விட்டு பழனி அருகே உள்ள வண்டிவாய்க்காலில் தனது தாயாா் வாழ்ந்த வீட்டுக்கு சென்று உறவினா்களை சந்தித்துப் பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments