முகப்பு
மதுரை

மதுரை அருகே காரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு: கடத்தல் கும்பலைச் சேர்ந்த இளைஞரிடம் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காரில் கடத்தப்பட்ட தொழிலதிபரை போலீஸார் மீட்டு,  பொதுமக்களிடம் சிக்கிய

Updated On : 23 ஜூலை 2018, 7:08 am IST
பகிர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காரில் கடத்தப்பட்ட தொழிலதிபரை போலீஸார் மீட்டு,  பொதுமக்களிடம் சிக்கிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த இளைஞரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் மாத்யூ (65). இவர், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் "சூப்பர் மேக்ஸி' என்ற பெயரில் ரப்பர் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். மதுரையில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர்,  ஞாயிற்றுக்கிழமை காலை காரில் தொழிற்சாலைக்குப் புறப்பட்டார். அவருடன் உதவியாளர் மத்தாயியும் வந்தார். காரை ஓட்டுநர் ஷியாம் ஓட்டினார்.
 கார்  நரசிங்கம்பட்டி வழியாக அரிட்டாபட்டி சாலையில் சென்றபோது,  அவரது காரை, 2 கார்கள்  பின்தொடர்ந்து வந்தன.  அதில் ஒரு கார், தொழிலதிபர் காரில் உரசியபடி முன்னால் நின்றது. இதனையடுத்து ஜோசப் மாத்யூ சென்ற காரை ஓட்டுநர் நிறுத்தினார்.  அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல், காருக்குள் இருந்த ஓட்டுநர் ஷியாமைத் தாக்கி  கீழே பள்ளத்தில் தள்ளிவிட்டனர். பின்னர் தொழிலதிபர் ஜோசப் மாத்யூ மற்றும் உதவியாளர் மத்தாயை காருடன் கடத்திச் சென்றது. 
    பள்ளத்திலிருந்து வெளியில் வந்த ஷியாம்,  மாத்யூவை ஒரு கும்பல் கடத்துவதாகவும் உதவி செய்யுமாறும் கத்தினார். அந்த நேரத்தில் அரசு போக்குவரத்துக் கழக நகரப்  பேருந்து சம்பவ இடத்தை கடந்தது. உடனே பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி, கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றொரு காரை வழிமறித்து, அதில் இருந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 
   தகவலறிந்த மதுரை ஊரக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வனிதா சம்பவ இடத்துக்கு போலீஸாருடன் விரைந்து வந்து கடத்தல் கும்பலின் காரை கைப்பற்றினர். அந்த காரில் இருந்த பட்டா கத்திகள் மற்றும் கத்திகளை கைப்பற்றினர். 
தொழிலதிபர் மீட்பு: இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி வனிதா தலைமையில் 3 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடத்தல் கும்பல், சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே தொழிலதிபர் காரை நிறுத்திவிட்டு,  இருவரையும் வேறு காரில் ஏற்றி கடத்திச் சென்று விட்டனர். சிவகங்கை போலீஸார் தொழிலதிபரின் காரை கைப்பற்றினர்.
  இந்நிலையில் கடத்தல் கும்பல் சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தொழிலதிபர் ஜேம்ஸ் மாத்யூ, உதவியாளர் மத்தாய் ஆகியோரை இறக்கி விட்டுத் தப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் இருவரையும் மீட்டு விசாரித்து வருகின்றனர். 
வரைபடம் தயாரித்து கடத்தல்
போலீஸில் ஒப்படைக்கப்பட்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்த இளைஞர், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  
       இக்கும்பல், ஜோசப் மாத்யூ செல்லும் சாலையை வரைபடம் தயாரித்து, கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் குறித்து கார்திக்கிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments