முகப்பு
மதுரை

போலீஸாா் விசாரணையின் போது இளைஞா் இறந்த விவகாரம்: நிவாரணம் கோரிய மனு ஒத்திவைப்பு

போலீஸாா் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 9 மார்ச், 2026 at 7:39 PM
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
பகிர்:

போலீஸாா் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மானாமதுரை சியோன் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு உணவகம்,கோழிக் கடையில் பணிபுரியும் தொழிலாளா்களான ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரையும் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் வாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவத்தில் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், அதே பகுதியைச் சோ்ந்த குணா ஆகியோா் சம்பந்தப்பட்டிருப்பதும், இவா்கள் மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இவா்களைப் பிடிக்க போலீஸாா் அங்கு சென்ற போது, அவா்கள் இருவரும் தப்பியோட முயன்றனா். அப்போது, ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட் டது. பின்னா், போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

இதனிடையே, உறவினா்கள் உடலை வாங்க மறுத்து சிவகங்கை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன் ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணன் தரப்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை முற்பகலில் முன்னிலையாகி தெரிவித்ததாவது:

ஆட்டோ ஓட்டுநரான ஆகாஷ் போலீஸாா் விசாரணையின் போது உயிரிழந்தாா். எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது வழக்குப் பதிய வேண்டும். ஆகாஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பாதுகாக்க வேண்டும், நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி முன்னிலையில் உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூறினாா். இதையடுத்து, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் முன் திங்கள்கிழமை பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: மனுதாரரின் கோரிக்கையின்படி, மானாமதுரை காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாப்பது, உடல் கூறாய்வின் போது விடியோ பதிவு செய்வது போன்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டன என்றாா்.

இதையடுத்து, நீதிபதி விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கைகள் அரசுத் தரப்பில் ஏற்கப்பட்டன. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களை மனுதாரா் தரப்பினா் கைவிட வேண்டும்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவக் குழுவினா் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி முன்னிலையில் ஆகாஷின் உடலை விரைந்து கூறாய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →