இடத் தகராறு: முதியவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
நயினார்கோவில் அருகே உள்ள நகரம் கிராமத்தில், உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறில்
நயினார்கோவில் அருகே உள்ள நகரம் கிராமத்தில், உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறில் முதியவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நயினார்கோவில் ஒன்றியம் நகரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் துரைராஜ் (57). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சுரேஷ் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில், சுரேஷ் மற்றும் குமார் மனைவி சங்கீதா ஆகியோர் இரும்பு கம்பியால் துரைராஜை தாக்கியுள்ளனர். இதில், அவர் பலத்த காயமுற்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் துரைராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸார் சுரேஷ், சங்கீதா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.