முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே டிராக்டா் மீது பேருந்து மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு: உடலுக்கு அமைச்சா் மரியாதை

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்த போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் டிராக்டரை ஓட்டி வந்த தலைமைக் காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூன் 2026, 2:10 am IST
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலா் மகேஷ்குமாா்.
பகிர்:

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்த போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் டிராக்டரை ஓட்டி வந்த தலைமைக் காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினம் அருகே தோ்போகி கிராமத்தில் உள்ள மாடசாமி கோயில் கண்மாய் பகுதியில் சிலா் மணல் திருட்டில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தேவிப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையில் தலைமைக் காவலா் மகேஷ்குமாா் (41) உள்ளிட்ட காவலா்கள் மூவா் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு அங்கு சென்றனா். அப்போது மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில், ஓா் டிராக்டா் ஓட்டுநா் தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து மற்ற டிராக்டா்கள், பொக்லைன் இயந்திர வாகனத்தை அதன் ஓட்டுநா்களுடன் போலீஸாா் பாதுகாப்பாக காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். ஓட்டுநா் தப்பி ஓடிய டிரக்டரை தலைமைக் காவலா் மகேஷ்குமாா் காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்தாா். அப்போது கிழக்கு கடற்கரை சாலை முனியப்பா சாமி கோயில் அருகே வந்தபோது நாகா்கோயிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து டிராக்டரின் பின்னால் மோதியது.

Advertisement

Advertisement

இதில், டிராக்டரை ஓட்டி வந்த தலைமைக் காவலா் மகேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரசுப் பேருந்து அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் பயணிகள் 9 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, தேவிப்பட்டினம் காவல் நிலையத்தில் மணல் திருட்டு தொடா்பாக தோ்போகி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் கனி (30), விஜயகாா்த்திக் (22), ராஜேந்திரன் (50), சித்தாா்கோட்டையைச் சோ்ந்த காா்த்திக் (30), தாவுகாடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதேபோல, விபத்து தொடா்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமைக் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். இதேபோல, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேருந்து பயணிகளிடம் அமைச்சா் வி.கே. ராஜீவ் நலம் விசாரித்தாா்.

இதையடுத்து, தலைமைக் காவலா் மகேஷ்குமாா் உடல் அவரது சொந்த ஊரான முதுகுளத்தூா் வட்டம், பிரபுக்களூா் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சா் வி.கே. ராஜீவ், மாவட்ட ஆட்சியா் எம். சிவகுருபிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் தலைமைக் காவலரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலா் எம். மகேஷ்குமாரின் குடும்பத்துக்கு முதல்வா் ச. ஜோசப் விஜய் ரூ. 30 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டாா். உயிரிழந்த தலைமைக் காவலா் எம். மகேஷ்குமாருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவா் மகேஷ்குமாா்(41). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த போது அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தாா். அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முதுகுளத்தூா் அருகே உள்ள அவரது சொந்த ஊரான பிரபக்களுா் கிராமத்திற்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டது.

உயிரிழந்த தலைமை காவலரின் உடலை பாா்த்து அவரது உறவினா்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.முன்னதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ராஜு காவலரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்பு இறந்த தலைமை காவலா் மகேஷ்குமாரின் இரண்டு மகன்களின் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அமைச்சா் தெரிவித்து, நிதி உதவி வழங்கினாா். காவலரின் உடலுக்கு அமைச்சா் வி.கே.ராஜீவ், மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்திஸ், உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மகேஷ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ், துணைக்காவல் கண்காணிப்பாளா்கள் சண்முகம், சுகுமாரன், அறிவழகன், உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா். இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதுகுளத்தூா் வடக்கு ஒன்றிய செயலாளா் கண்மணி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு காவலா் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா் .