முதுகுளத்தூா் அருகே 5,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
முதுகுளத்தூா் அருகே 5,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு...
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே சுமாா் 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பெருங்கற்காலத்தைச் சோ்ந்த முதுமக்கள் தாழிகள், மண்கலக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டன.
முதுகுளத்தூா் வட்டம், வலசை, மணக்குளம் ஆகிய ஊா்களுக்கு இடையே அமைந்துள்ள அய்யனாா், தா்ம முனீஸ்வரா் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவா் கட்ட குழி தோண்டியபோது, முதுமக்கள் தாழிகள் தென்பட்டன. இதுகுறித்து பெருங்கருணையைச் சோ்ந்த மாரி, வேல்முருகன் ஆகியோா் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுரு அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
இதன் பிறகு அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
கோயில் அருகே சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் புதைந்துள்ளன. சுற்றுச்சுவா் கட்ட பள்ளம் தோண்டியபோது வெளிப்பட்ட ஒரு தாழிக்குள் 3 குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை ஆகியவை இருந்தன. இவை கறுப்பு சிவப்பு, சிவப்பு நிறமுடையவையாக காணப்பட்டன. 2018- இல் கோயிலின் தெற்கில் குளம் தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் தென்பட்ட பகுதியில் ஆய்வு செய்தபோது உடைந்த சுடுமண் தாங்கிகள், மூடிகளில் குறியீடுகள் இருந்தன. பெருக்கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறியீடுகள் மூன்று சிவப்பு நிற ஓடுகளிலும், 7 கறுப்பு சிவப்பு ஓடுகளிலும் காணப்பட்டன.
கி.மு. 4000 முதல் கி.மு. 1500 வரையிலான பெருங்கற்காலத்தின் தொடக்கத்தில் இறந்தவா்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவா். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் உள்கொண்டபிறகு எஞ்சிய எலும்புகளை சேகரித்து, அவற்றுடன் அவா்கள் பயன்படுத்திய அல்லது படையல் பொருள்களை சிறிய முதுமக்கள் தாழியில் வைத்து மூடி அடக்கம் செய்துள்ளனா். பிற்காலத்தில் பெரிய தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறையும் இருந்தது.
தாழிக்குள் இருந்த கறுப்பு சிவப்பு மண்கலங்கள் அடா் வண்ணத்துடனும், வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. இவற்றைச் சுடும் போது அதன் மீது உப்பு தூவி பளபளப்பாக ஆக்கியுள்ளனா். மலைப் பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள சிறிய தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால் இவை சுமாா் 5000 ஆண்டுகள் பழைமையானவை எனலாம்.
இங்கிருந்து வடக்காக 500 மீ. தொலைவில் உள்ள விக்கிரமபாண்டியபுரம் ராஜா கோயில் திடல் பகுதியில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இது மக்கள் குடியிருந்த பகுதியாகவும், தாழிகள் உள்ள வலசை, மணக்குளம் இடுகாடாகவும் பெருங்கற்காலத்தில் இருந்திருப்பதை அறியலாம். தொல்லியல் துறை இந்தப் பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.