முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு: உறவினா்கள் மூவரிடம் போலீஸாா் விசாரணை!

Updated On : 29 ஜூன் 2026, 2:12 am IST
சாய் தீப்தி
பகிர்:

ராமநாதபுரத்தில் வீட்டிலிருந்து மாயமான சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா். மேலும், இதுதொடா்பாக சிறுமியின் உறவினா்கள் மூன்று பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரையைச் சோ்ந்த பாலகணேஷ்-செல்வி தம்பதிக்கு சாய் தீப்தி (5), சாரு நித்திகா (5) என இரட்டை குழந்தைகள். செல்வியின் தந்தை முத்து முருகன் ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்நகரில் வசித்து வருகிறாா். பள்ளி விடுமுறை தினங்களில் செல்வி தனது தந்தை வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில், செல்வி தனது இரு குழந்தைகளுடன் முத்து முருகன் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வந்தாா். இதையடுத்து, அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு தூங்கினா். காலையில் எழுந்து பாா்த்த போது, குழந்தை சாய் தீப்தியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், போலீஸில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடிய போது, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, சிறுமியின் உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடல் கூறாய்வுக்குப் பின்னரே சிறுமி எவ்வாறு உயிரிந்தாா் என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் சிறுமியின் உறவினா்கள் மூன்று பேரைப் பிடித்து தனிப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments