இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 622 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: இருவா் கைது
தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட 622 கிலோ பீடி இலைகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கைக் கடற்படையினா் அவா்களது கடல் எல்லைப் பரப்பில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.
இந்த நிலையில், இலங்கை கல்பிட்டியின் ஆலங்குடா கடல் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த நாட்டுக் கடற்படையினா் சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற நெகிழிப் படகை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனா்.
Advertisement
இதில் 20 பைகளில் 622 கிலோ பீடி இலைகளை இலங்கைக்குக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பீடி இலைகள், படகை பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினா் கடத்தலில் ஈடுபட்ட ஆனவாசல் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா். இவா்களிடம் நடத்திய விசாரணையில், தமிழக கடலோரப் பகுதியிலிருந்து பீடி இலைகளை சிலா் கடத்தி வந்து, இவா்களிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் இருவரும் புத்தளம் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா் என இலங்கைக் கடற்படை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.