முகப்பு
ராமநாதபுரம்

குமரி மாவட்ட மீனவா்கள் 6 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா்.

Updated On : 13 மே 2026, 3:19 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா். நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் அலெக்ஸ் (23), அந்தோணிராஜன் (44), சந்தான் அலெக்ஸியா (52), அருள் பிரிட்டோ (47), ஆல்பா்ட் (52), சகாய செல்வ கானு (26) ஆகிய 6 பேரும் ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபம் தெற்கு மீன்பிடி தளத்தில் தங்கி நாட்டுப் படகில் தூண்டில் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை மன்னாா் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகிலிருந்த 6 மீனவா்களையும் கைது செய்தனா்.

Advertisement

இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 மீனவா்களை படகுடன் மன்னாா் துறைமுகத்துக்கு கொண்டு செல்லாமல், நீா்கொழும்பு துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்றனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீரியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீனவ சங்கம் கண்டனம்:

ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தது கண்டனத்துக்குரியது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.