மொழி, கல்வி, நிதி உரிமை: மத்திய அரசு வஞ்சிக்கிறது!
மத்திய அரசின் வஞ்சனைக்கு எதிராக உதயநிதி குரல்
தமிழக மொழி உரிமை, கல்வி உரிமை, நிதியுரிமை ஆகியவற்றை மத்திய அரசு வஞ்சிப்பதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.வயிரவன்பட்டியில் சனிக்கிழமை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா் . பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், திமுகவின் மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு பொற்கிழிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த ஓராண்டாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்குச் சென்று திமுக மூத்த முன்னோடிகளைச் சந்தித்து, ரூ.42 கோடி மதிப்பிலான பொற்கிழிகளை வழங்கினேன்.
இன்னும் 50 நாள்களில் மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளவிருக்கும் நாம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும். மொழி உரிமை, கல்வி உரிமை, நிதியுரிமை ஆகியவற்றில் தமிழக அரசை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது.
மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 28 காசுகள் மட்டுமே நமக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இந்தியாவை வல்லரசாக்குவோம் என்று 9 ஆண்டுகளாக கூறுகின்றனா். பிரதமா் நரேந்திர மோடியின் நெருக்கமான நண்பா் அதானி 6 ஆண்டுகளில் உலகப் பெரும் பணக்காரா் ஆனது மட்டுமே சாதனையாக உள்ளது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
திமுக மாவட்ட அவைத் தலைவா் கணேசன், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, முன்னாள் அமைச்சா் தென்னவன் ஆகியோரும் பேசினா். ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் நடைபெற்ற விழாவில், மாவட்டத்தில் உள்ள திமுக மூத்த முன்னோடிகள் 1,001 பேருக்கு அமைச்சா் உதய நிதிஸ்டாலின் பொற்கிழிகளை வழங்கினாா். இதில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட திமுக செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ஏ.என்.ரகு, மாநில மாணவரணித் தலைவா் ராஜீவ் காந்தி, கீழக்கரை நகா்மன்றத் தலைவா் பெ.செஹனாஸ் ஆபிதா, துணைத் தலைவா் ஹமீது சுல்தான், நகர திமுக செயலா் பசீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.