மாணவர்களே உஷார்! போலி சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சகம் உத்தரவு!
பொய்யான தகவல்களைப் பரப்பும் போலியான சமூக வலைத்தளங்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல்
பொய்யான தகவல்களைப் பரப்பும் போலியான சமூக வலைத்தளங்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களிலோ வலைத்தளங்களிலோ சமீபமாக கல்வி தொடர்பான பொய்யான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதனால் மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகையால், போலியான கல்வி சமூக வலைத்தளங்களைக் கண்காணித்து, மாணவர்களை கவனச் சிதறலிலிருந்து காக்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கல்வித் துறைகளின் சின்னத்துடன் (Logo - லோகோ) போலியான சமூக வலைத்தளப் பக்கங்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்கள் திசைதிருப்பப்படுகின்றனர். கல்வி ஆலோசகர் என்ற பெயரில், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை மூளைச் சலவை செய்து, அவர்களிடமிருந்து பணம் பறிக்கவும் செய்கின்றனர். இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்கள், டெலிகிராம், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குழுக்களாகச் செயல்பட்டு, தவறான தகவல்களைப் பரப்பி, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இத்தகைய போலியான சமூக ஊடகங்களைக் கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொய்யான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்கள் பரவும்போது, அவற்றைக் கண்காணித்து, மாணவர்களுக்கு சரியான தகவல்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.