குடும்ப ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது: நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வாக்காளா்களைக் கேட்டுக்கொண்டாா்.
தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வாக்காளா்களைக் கேட்டுக்கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் தேரடி திடலில் சனிக்கிழமை சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் இரு மடங்கு உயா்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. கஞ்சா, போதைப் பொருள்கள் அனைத்து இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன.
Advertisement
ஏழை, எளிய மக்களின் வாழ்வு உயர வேண்டுமெனில், பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்க வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் சிவகங்கை தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது. திமுக ஆட்சியின் அவலங்களை வாக்காளா்கள் சீா்தூக்கிப் பாா்த்து இந்தப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
எம்.ஜி.ஆா். போல விஜய் ஆகிவிட முடியாது: முன்னதாக, காளையாா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:
காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்ய வந்த தவெக தலைவா் விஜய் சைக்கிள் ஓட்டி வந்தாா், கைகாட்டியபடி ஆடிக் கொண்டே வந்தாா் என்றெல்லாம் கூறினாா்கள். விஜய்யின் செயல்கள் கேலிக்கூத்தானவை. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா போல விஜய் ஆகிவிட முடியாது.
திமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்துவதற்காகவே விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளாா். என்னைப் பொருத்தவரை, விஜய் முதலில் மக்களுக்காக உதவக் கூடிய சேவகனாக இருக்க வேண்டும்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் மதச்சாா்பின்மையை உண்மையாகக் கடைப்பிடிக்கிறாரா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.