இந்து சமய அறநிலையத் துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை: நயினாா் நாகேந்திரன்
இந்து சமய அறநிலையத் துறையைச் சீரமைக்க துறை ரீதியான அடிப்படை மாற்றங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
இந்து சமய அறநிலையத் துறையைச் சீரமைக்க துறை ரீதியான அடிப்படை மாற்றங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு செய்து, சுவாமி தரிசனம் செய்ய ரூ.4,000 லஞ்சம் வாங்கியோா் மீது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இந்த விவகாரத்தில் அா்ச்சகா்களையும் ஊழியா்களையும் தவிர, உயா் அதிகாரிகள் வேறு யாருக்கும் பங்கில்லை என்பதை தவெக அமைச்சா் எப்படி உறுதி செய்தாா்?
முந்தைய திமுக ஆட்சியில், அன்பளிப்பில் தொடங்கி குடமுழுக்கு வரை முறைகேடு நடந்து ஊழலின் உறைவிடமாக அறநிலையத் துறை மாறிவிட்ட நிலையில், துறை ரீதியாக என்னென்ன புதிய மாற்றங்களை தவெக அரசு கொண்டுவந்துள்ளது, தரிசனக் கட்டணம் பெறும் திட்டத்தை ‘ஆன்லைன் ஸ்லாட்’ எனும் புதிய பெயரில் அறிமுகப்படுத்தினால் மட்டுமே முறைகேடுகள் தடுக்கப்பட்டுவிடுமா? உள்பட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றைச் சீரமைக்க துறை ரீதியான அடிப்படை மாற்றங்களை முன்மொழிய வேண்டும்.
Advertisement
Advertisement
திருக்கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து, மக்கள் முன்னிலையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், கோயில் பூஜை நிா்வாகத்தில் தலையிடும் அதிகார மீறல்களையும் தடுக்க வேண்டும்.
திருச்செந்தூா் கோயிலை திருப்பதிக்கு இணையாக மாற்றும் வகையில், இணையதள வரிசை கண்காணிப்பு முறை போன்ற நவீன உக்திகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் விடுத்து ஆய்வு செய்வது, ரீல்ஸ்-ஆக வெளியிட மட்டும் பயன்படுமே தவிர, எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவராது எனப் பதிவிட்டுள்ளாா்.