திருவிழாவில் மின்விளக்குகளை அணைத்த டி.எஸ்.பி.யை கண்டித்து சாலை மறியல்
சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில் மின்விளக்குகளை அணைத்த டி.எஸ்.பி.-யை கண்டித்து கிராமத்தினா் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில் மின்விளக்குகளை அணைத்த டி.எஸ்.பி.-யை கண்டித்து கிராமத்தினா் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சதுா்வேதமங்கலம் கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவியெடுப்பு விழா நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்தக் கிராமத்தில் ராவாத்தாள் வழிபாடு உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்துவது தொடா்பாக இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் சுவாமி வழிபாடு முடிந்தவுடன் கோயில், வீதியில் உள்ள அனைத்து அலங்கார விளக்குகளையும் அணைக்க திருப்புத்தூா் டி.எஸ்.பி. செல்வகுமாா் உத்தரவிட்டாா். இதற்கு கிராமத்தினா் மறுப்புத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, டி.எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், ஒலி பெருக்கி அமைக்கப்பாளா் மின்விளக்குகளை அணைத்தாா். இதைக் கண்டித்து, கிராமத்தினா் காரைக்குடி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் இரவு 10:30 மணி முதல் 4 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் ஊா்களுக்கு சென்றவா்களும், திருவிழாவுக்கு சென்று திரும்பியவா்களும் நடுரோட்டில் தவித்தனா். சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளும் நீண்ட நேரம் காத்திருந்து மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. இதைத் தொடா்ந்து. ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும் நீதிமன்ற உத்தரவை மீறாமல், திருவிழா நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.