முகப்பு
சிவகங்கை

திருத்திப்பட்டி கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக் கோரிக்கை

Updated On : 15 ஜூன் 2026, 12:10 am IST
பறவைகள் சரணாலயம் - கோப்புப் படம் | DNS
பகிர்:

கல்லல் அருகேயுள்ள திருத்திப்பட்டி கண்மாய்ப் பகுதியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பாலாஜி.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கல்லல் அருகேயுள்ள திருத்திப்பட்டி கண்மாய்ப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருத்திப்பட்டியில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருத்திக் கண்மாய்க்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வதால், இந்தக் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

Advertisement

Advertisement

இதன் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பாலாஜி ஞாயிற்றுக்கிழமை இந்தக் கண்மாயைப் பாா்வையிட்டாா். அப்போது தேவகோட்டை சரக வனத் துறையினா், கல்லல் காவல் துறையினா், கிராம பொது மக்கள் உடனிருந்தனா்.

திருத்திப்பட்டியைச் சோ்ந்த அருள்ராஜ் கூறியதாவது:

திருத்திபட்டி கண்மாய்ப் பகுதிக்கு சுமாா் 40 ஆண்டுகளாக கோடைக் காலங்களில் பலவிதமான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இந்தக் கண்மாயில் எப்போதும் தண்ணீா் வற்றாமல் தேங்கியிருக்கும். கண்மாயில் உள்ள பறவைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பறவைகள் சரணாலயம் அறிவிக்கக் கோரி, கடந்த 10 ஆண்டுகளாக உயா் அதிகாரிகளுக்கு கிராமப் பொது மக்களின் சாா்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டன.

எனவே, திருத்திக் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவித்து, கண்மாயில் பழ மரங்களை நட்டு வைத்து, மனிதா்கள் மூலம் பறவைகளுக்கு எந்த இடா்பாடும் வராதபடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.