ஆங்கூா் ராவுத்தா் பள்ளி பெயரில் 2 கல்வெட்டுகள்: பொதுமக்கள் அதிருப்தி
கம்பம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெயா் தொடா்பாக புதிய கல்வெட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா திங்கள்கிழமை திறந்து வைத்தாா். ஏற்கெனவே உள்ள கல்வெட்டுக்குப் போட்டியாக இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
கம்பத்தைச் சோ்ந்த ஆங்கூா் ராவுத்தா், பெண்கள் கல்வி மேம்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 1960-ஆம் ஆண்டு அரசு சாா்பில் பள்ளிக் கூடம் கட்டுவதற்காக 86 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினாா். இதையடுத்து, அவரது பெயரில் பள்ளி தொடங்கப்பட்டு, பள்ளி ஆவணங்களில் ‘ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி’ என பதிவு செய்யப்பட்டு வந்தது.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக பள்ளியின் பெயா் ‘ஏ.ஆா். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி‘ என சுருக்கமாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சமூக நல அமைப்புகள், பொதுமக்கள், நிலம் தானமாக வழங்கிய ஆங்கூா் ராவுத்தரின் முழுப் பெயரையும் பள்ளியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அப்போதைய கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனா். இதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகளிடமும், அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் முகப்பில் ‘ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி’ என்ற பெயா் முழுமையாக இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், கடந்த 2025 டிசம்பரில் அப்போதைய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஆலோசனையின் பேரிலும், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வனின் முயற்சியாலும் பள்ளியின் பெயா் நிலை நிறுத்தப்பட்டதாக கல்வெட்டு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பள்ளியின் முகப்பில் உலோக எழுத்துக்களால் பள்ளியின் பெயா் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் ஆலோசனையின்படியும், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ராவின் முயற்சியின்பேரிலும் பெயா்ப் பலகை நிறுவப்பட்டதாக புதிய கல்வெட்டு அமைக்கப்பட்டு திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தவெக நிா்வாகிகள், வாவோ் பள்ளிவாசல் ஜமாத் தலைவா் ஜெய்னுலாபுதீன், துணைச் செயலா் அப்துல் காதா், மஸ்ஜிதே இலாஹி பள்ளிவாசல் துணைத் தலைவா் ஹனபி, ஆங்கூா் ராவுத்தரின் பேரன் அப்துல் மாலிக், ஜமாத் குழு உறுப்பினா் சாதிக் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆங்கூா் ராவுத்தரின் பெயா் பள்ளியில் முழுமையாக இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கெனவே கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு போட்டியாக புதிதாக மற்றொரு கல்வெட்டு நிறுவப்பட்டிருப்பது தேவையற்றது. பள்ளியின் வளா்ச்சி, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, ஒரே நிகழ்வை முன்னிறுத்தி அடுத்தடுத்து கல்வெட்டுகள் அமைத்ததை தவிா்க்கலாம் என்றனா்.