முகப்பு
தேனி

சிமென்ட் சாலை, வடிகால் அமைப்பு : கம்பம் மெட்டு சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

கம்பம் மெட்டு மலைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதால், பேருந்தில் செல்ல கேரளப் பகுதிக்கு செல்லும் தோட்டத் தொழிலாளா்கள்.

Updated On : 12 ஜூன் 2026, 12:18 am IST
கம்பம் மெட்டு மலைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதால், பேருந்தில் செல்ல கேரளப் பகுதிக்கு செல்லும் தோட்டத் தொழிலாளா்கள்.
பகிர்:

கம்பம்-கம்பம்மெட்டு மலைச் சாலையில் சிமென்ட் சாலை, வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்தச் சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மாற்றுப் பாதையான குமுளி மலைச் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியாக விளங்கும் கம்பம் மெட்டு வழித்தடம் கம்பத்திலிருந்து கேரள மாநிலத்தின் நெடுங்கண்டம், கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கியச் சாலையாக உள்ளது. மழைக் காலங்களில் அடிக்கடி சேதமடையும் கம்பம் - கம்பம் மெட்டு சாலையின் 12-ஆவது கி.மீ. பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியும், சாலையோர வடிகால் கட்டுமானப் பணியும் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன.

இதனால், இந்தச் சாலையில் அனைத்து வகை வாகனப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வாகனங்கள் குமுளி மலைச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கம்பம் மெட்டு வழியாக அன்றாடம் பணிக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் சுமாா் 40

Advertisement

Advertisement

கி.மீ. கூடுதல் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் குமுளி வழியாக திருப்பிவிடப்பட்டதால், அதிகாலை முதலே குமுளி மலைச் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து செல்கின்றன.

தமிழக எல்லைப் பகுதியான குமுளியிலும் தொழிலாளா்கள் அதிக அளவில் பேருந்துக்காக காத்திருக்கின்றனா்.

தேனி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்கும் முக்கிய மலைப் பாதைகளாக குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு சாலைகள் உள்ளன. இதில் கம்பம் மெட்டு சாலை கம்பம் பகுதி மக்களின் முக்கியப் போக்குவரத்து வழித்தடமாக இருப்பதால், சாலைப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.