சாத்தூர் அருகே பட்டாசு ஆலைக்கு "சீல்' வைப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குத்தகை முறையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை "சீல்' வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குத்தகை முறையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை "சீல்' வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, 9 துணை ஆட்சியர்களும், 15 வட்டாட்சியர்கள் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாத்தூர் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான குழுவினர் கரிசல்பட்டி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, அந்த ஆலையின் உரிமையாளர் ரகுநாதன், தாயில்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சட்ட விரோதமாக குத்தகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. மேலும் இங்கு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்ததும், ரசாயனப் பொருட்கள் நிரப்பும் அறை, திரிவெட்டும் அறைகளில் பட்டாசு தயாரித்ததும் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.
மேலும், விதிமுறைகளை மீறி கந்தக அறையில் 5 கிலோ எடையுள்ள கந்தகம் மற்றும் அலுமினிய பவுடர் கலந்த கலவையை தரையில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், சுமார் 50 கிலோ எடையுள்ள மணிமருந்துகள் வெட்டவெளியில் உலர வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த ஆலைக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
இதையடுத்து சாத்தூர் வட்டாட்சியர் சாந்தி பரிந்துரையின் பேரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்தார்.
சட்டவிரோதமாக குத்தகை அடிப்படையில் பட்டாசுகள் உற்பத்தி செய்து வந்த குத்தகைதாரர் ஜெயக்குமார் மற்றும் உரிமையாளர் ரகுநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகளே நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.