முகப்பு
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கோயில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 14 செப்டம்பர் 2018, 5:22 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விருதுநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை வேலாயுத தேவர் விநாயகர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல், அக்ரஹாரம் அரச மரத்து விநாயகர் வர்ண காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், முருகன் கோயில் ஆகியவற்றில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
சிவகாசியில்... வெற்றிவிநாயகர் கோயில், அக்னி விநாயகர் கோயில்,  பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள பஞ்சமுகவிநாயகர், செந்தில் விநாயகர் கோயில், கற்பக விநாயகர் கோயில், உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.    பக்தர்களுக்கு கொழுக்கட்டை, பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.
சாத்தூரில்... பிரதான சாலையில் உள்ள வெற்றி விநாயகர் கோயில், வெள்ளைகரை சாலையில் உள்ள கரைபிள்ளையார் கோயில், என்.ஜி.ஒ. காலனியில் உள்ள பிள்ளையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதே போன்று சாத்தூர் அருகே ஓடைபட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சாத்தூர், கோயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரைத் தரிசனம் செய்தனர். 
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
ராஜபாளையத்தில்... தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 31 ஆவது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலம் ராஜபாளையம்  வடக்கு காவல் நிலையம் முன்புள்ள அலங்கார பந்தலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து ஐ.என்.டி.யூ.சி நகர் எதிரேயுள்ள கண்மாயில் கரைக்கப்பட்டது. இதையொட்டி ராஜபாளையம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.