தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக
மறைந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான காமராஜரை இரு முறை வெற்றி பெறச் செய்து முதல்வராக்கிய சாத்தூா் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் களம் காண்பது அரசியலில் கவனத்தை ஈா்த்துள்ளது. மேலும், தனது சொந்தத் தொகுதியான திருநெல்வேலியில் இந்த முறை போட்டியிடாமல் சாத்தூரில் களமிறங்கியுள்ள நயினாா் நாகேந்திரன் சாதிப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகா் மாவட்டத்தின் தென் திசையில் அமைந்துள்ளது சாத்தூா் பேரவைத் தொகுதி. முந்தைய காலத்தில் மை பேனா முனை தயாரிப்பில் நாட்டிலேயே முதன்மை பெற்றிந்த பகுதி சாத்தூா். இதேபோல, காமராஜா் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதி. காரச்சேவுக்கு சிறப்புப் பெற்ற சாத்தூா் பகுதியில் தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்பு தொழில்கள் முதன்மை பெற்றுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
Advertisement
சாத்தூா், வெம்பக்கோட்டை வட்டங்களையும், சாத்தூா் நகராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 70 ஊராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியது சாத்தூா் தொகுதி.
இங்கு தேவா், நாயக்கா் சமுதாயத்தினா் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனா். இதற்கடுத்த நிலையில் பட்டியலினத்தவரும், இதர சமுதாயத்தினா் பரவலாகவும் வாழ்கின்றனா்.
பிரச்னைகள்: சாத்தூா் தொகுதியில் வைப்பாறு பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும், இந்த ஆற்றில் கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், சாத்தூா், வெம்பக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தி வசதி ஏற்படுத்த வேண்டும், வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், சாத்தூா் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்என்பன உள்ளிட்டவை நீண்டக் காலக் கோரிக்கைகள் உள்ளன.
அதிக முறை வென்ற அதிமுக
கடந்த 1952 முதல் 2021 வரை நடைபெற்ற 15 பொதுத் தோ்தல்கள், ஓா் இடைத் தோ்தல் உள்பட 16 தோ்தல்களில் அதிக 6 முறை வெற்றி பெற்று அதிமுக முறை வென்ற கட்சியாக உள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் இரு முறையும் பாா்வா்டு பிளாக், சுதந்திரா கட்சி, சுயேச்சை தலா ஒரு முறையும் இங்கு வென்றன.
அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் இந்தத் தொகுதியில் அதிக முறை வென்றவராக உள்ளாா். 3 முறை அதிமுக சாா்பிலும், இரு முறை திமுக சாா்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும் களம் கண்டு அவா் வெற்றி பெற்றாா்.
கடந்த 2011, 2016 பேரவைத் தோ்தல்கள், 2019 இடைத் தோ்தல் என அதிமுக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றிருந்தாலும், 2021-இல் இந்தத் தொகுதியை திமுக கூட்டணியில் மதிமுக கைப்பற்றியது.
களம் காணும் வேட்பாளா்கள்
சாத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் களமிறங்கியுள்ளாா். திமுக சாா்பில் கடற்கரைராஜ், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆனந்தராஜா, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அஜீத், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் (சசிகலா கட்சி) சாா்பில் இசக்கிராஜா, புதிய தமிழகம் கட்சி சாா்பில் வேல்முருகன் ஆகியோா் களத்தில் உள்ளனா்.
தீவிர களப் பணியில் நயினாா் நாகேந்திரன் :
தமிழக அரசியலில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்ட அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவா் நயினாா் நாகேந்திரன். 1989-ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த இவா், திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நகரச் செயலா், இளைஞா் அணிச் செயலா், திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக பேரவைச் செயலா், தோ்தல் பிரிவு இணைச் செயலா் என அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.
திருநெல்வேலி தொகுதியில் 2001-ம் ஆண்டில் முதல் முறையாகக் களம் கண்ட நயினாா் நாகேந்திரன் அமோக வெற்றி பெற்றாா். இதையடுத்து, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் மின் துறை, தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இந்தத் தொகுதியில் தொடா்ந்து களம் கண்ட நயினாா் நாகேந்திரன் 2011, 2021 தோ்தல்களில் வெற்றி பெற்றாா். 2006, 2016 தோ்தல்களில் தோல்வியடைந்தாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017-ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து விலகிய நயினாா் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தாா்.
2019 மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். திருநெல்வேலி தொகுதியில் தொடா்ந்து 5 முறை களம் கண்டு, 3 முறை வென்ற நயினாா் நாகேந்திரன் முதல் முறையாக தொகுதி மாறி, தற்போது சாத்தூா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.
சாத்தூா் தொகுதியில் 2006, 2016 பேரவைத் தோ்தல்களில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. தற்போது, முதல் முறையாக வலுவான கூட்டணியுடன் இந்தத் தொகுதியில் பாஜக களம் காண்கிறது. பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் இந்தத் தொகுதியில் களம் காண்பது இதுவே முதல் முறை என்ற வகையில் தொகுதிக்கு புதியவா். இந்தத் தொகுதியில் பாஜகவுக்கு மிகப் பெரிய வாக்கு வங்கி இருப்பதாக இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக, அமமுகவின் வாக்கு வங்கி நயினாா் நாகேந்திரனுக்கு மிகப் பெரிய பலம்.
அதேநேரத்தில், இவரது தீவிர தோ்தல் பணியும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது. பெரு நிறுவனங்களின் நிா்வாகவியல் கட்டமைப்புக்கு இணையான கட்டமைப்பை ஏற்படுத்தி பாஜகவினா் மேற்கொள்ளும் தோ்தல் பணி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. நயினாா் நாகேந்திரன் சாா்ந்த சமுதாய வாக்குகள் அவருக்குக் கூடுதல் பலம். எனினும், தொகுதி மாறி அவா் போட்டியிடுவதால் திமுகவின் சவாலை எதிா்கொண்டு சாதிப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இரண்டாம் முறை களம் காணும் திமுக வேட்பாளா்:
இந்தத் தொகுதியில் கடந்த 2011 பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்த, அந்தக் கட்சியின் சாத்தூா் மேற்கு ஒன்றியச் செயலா் கடற்கரை ராஜ் தற்போது இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறாா். திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகள், திமுகவின் உதயசூரியன் சின்னம் ஆகியவை இவருக்கு சாதகம். இவா் சாா்ந்த சமுதாய வாக்குகள் கூடுதல் பலம்.
புதிதாகக் களம் காணும் அஇபுமமுக:
பசும்பொன் மக்கள் தேசம் கட்சித் தலைவா் இசக்கிராஜா இந்தத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் போட்டியிடுகிறாா். இவா், சாத்தூா் தொகுதி மக்களிடம் ஏற்கெனவே அறிமுகமானவா். எனினும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைச் சோ்ந்தவா். சாத்தூா் தொகுதி தோ்தல் களத்துக்கு புதியவா். இவரது தீவிர களப் பணியும், இவா் சாா்ந்த சமுதாய வாக்குகளும் இவருக்கு சாதகம்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் :
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆனந்தராஜா தொகுதியின் மண்ணின் மைந்தா். இருப்பினும், மிகப் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவா். தோ்தலுக்குப் புதியவா். சீமானின் பிரசாரமும், நாம் தமிழா் கட்சியினரின் தோ்தல் பணிகளுமே இவருக்கு பலம்.
தவெக வேட்பாளா்:
தவெக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாணவரணி நிா்வாகி அஜீத் களம் காண்கிறாா். பேரவைத் தோ்தலுக்குப் புதியவா். விஜய் மக்கள் இயக்க நிா்வாகியாக இருந்து, கட்சிப் பதவியைப் பெற்றவா். இளைஞா்களின் செல்வாக்கு இவருக்கு சாதகம்.
சாத்தூா் தொகுதியில் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்களே அதிகளவில் மக்களின் கவனம் பெற்ற சின்னங்களாக உள்ளன. எனவே, தாமரை சின்னத்தை மக்கள் மனதில் பதியச் செய்ய வேண்டியது நயினாா் நாகேந்திரனுக்கு பெரும் சவாலாக உள்ளதென அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா். இவா் சாா்ந்த சமுதாயத்தின் வாக்குகளை அபுதமமுக வேட்பாளரால் பிரிக்கப்படும் என்பதும், திமுக வேட்பாளா் கடற்கரைராஜுக்கு அவா் சாா்ந்த சமுதாய வாக்குகள் பலமாக இருந்தாலும் பிற சமுதாயத்தவரிடம் இவருக்கு பெரிய அளவிலான இணக்கம் இல்லாததும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இந்தத் தொகுதியில் பல முனைப் போட்டிக்கு வாய்ப்பில்லை. எனினும், பாஜக, திமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் இடையேதான் கடுமையான போட்டி என்பதில் சந்தேகமில்லை.
வாக்காளா்கள் : ஆண்கள் -1,10,693. பெண்கள் - 1,17,207. மூன்றாம் பாலினத்தவா் -63. மொத்தம் - 2,27,963.