முகப்பு
விருதுநகர்

சட்டவிரோத பட்டாசு திரி தயாரிப்பு கூடத்தில் தீ: பெண் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு கருந்திரி தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில பெண் உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:08 am IST
ராஜபாளையம் அருகே மாஞ்சோலை குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு திரி தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு கருந்திரி தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில பெண் உயிரிழந்தாா்.

ராஜபாளையம், தளவாய்புரத்தை அடுத்த மாஞ்சோலை குடியிருப்பு பின்புறம் இருந்த கால்நடை வளா்ப்பு கூடத்தை சிவகாசியைச் சோ்ந்த அஜித் குத்தகைக்கு எடுத்தாா். பின்னா், கொட்டகையின் ஒரு பகுதியில் பட்டாசுக்கு பயன்படுத்தும் கருந்திரியை பல மாதங்களாக சட்டவிரோதமாக தயாரித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், வழக்கம் போல, புதன்கிழமை தொழிலாளா்கள் கருந்திரி தயாரித்துக் கொண்டிருந்தனா். அப்போது, கொட்டகையின் மற்றொரு புறத்தில் வெல்டிங் வேலை நடைபெற்றது. அதிலிருந்து தீப்பொறி பறந்து தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் வடமாநில பெண் சாவித்திரி கோஸ் (50) உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருடன் பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கோடீஸ்வரன் (45), அழகுநம்பி (19), வட மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சீவ் (30), மிராஸ் (20) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய மீட்புக் குழுவினா் கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற அஜித்தை தேடி வருகின்றனா்.