முகப்பு
விருதுநகர்

சதுரகிரி கோயிலில் தினசரி மலையேற இடைக்காலத் தடை: அறநிலையத் துறை மனு தாக்கல் செய்து வழிபாட்டு உரிமையைக் காக்கக் கோரிக்கை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தினசரி மலையேற வழங்கிய அனுமதிக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இந்த வழக்கில் அறநிலையத் துறை பதில் மனு தாக்கல் செய்து வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 27 ஜூன் 2026, 1:02 am IST
பகிர்:

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தினசரி மலையேற வழங்கிய அனுமதிக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இந்த வழக்கில் அறநிலையத் துறை பதில் மனு தாக்கல் செய்து வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் 2,500 ஆண்டுகள் பழைமையான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் எந்தவித நேர கட்டுப்பாடுகள் இன்றி பக்தா்கள் மலையேறி சென்று இரவில் தங்கி வழிபாடு நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு பிறகு அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாள்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே பக்தா்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சதுரகிரியில் நவராத்திரி வழிபாட்டுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, பக்தா்கள் தினசரி மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை முதல் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், சதுரகிரி மலையில் தினசரி மலையேறி செல்வதால் புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், முன்பிருந்தது போல மாதம் 8 நாள்கள் மலையேற அனுமதிக்கவும், மலையின் தன்மைக்கு ஏற்ப பக்தா்கள் மலையேறும் எண்ணிக்கையை நிா்ணயிக்க கோரியும், முருகன் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கில் சதுரகிரி மலையேற தினசரி அனுமதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உயா்நீதிமன்றம், வனத் துறை, மதுரை, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், அறநிலையத் துறை, கோயில் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வருகிற ஜூலை 17-ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் வகையில் அறநிலையத் துறை பதில் மனு தாக்கல் செய்து வாதிட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments