முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தோ் நாளை வெள்ளோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சத்தில் உருவாக்கப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

Updated On : 13 மே 2026, 3:41 am IST
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட தோ்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சத்தில் உருவாக்கப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கோயிலில் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்ற ஸ்தலமாகும். இங்கு இந்திரன் உள்ளிட்ட தேவா்கள் வழிபட்டதாலும், மடவாா் வளாகம் வந்து வழிபடுபவா்களுக்கு சிவன் வீடு பேறு அளிப்பதால் இந்தத்தலம் கைலாயத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

கோயிலில் கொடி மரம் உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் சிவனின் 24 திருவிளையாடல்களும் மூலிகை சிற்பங்களாக வரையப்பட்டுள்ளது.

Advertisement

இந்தக் கோயிலில் மூலவா் வைத்தியநாத சுவாமியின் மீது புரட்டாசி 1, பங்குனி 1-ஆம் நாள்களில் சூரிய ஒளிபடும் அதியம் நிகழ்கிறது.

இந்தக் கோயில் பிரம்ம கைவா்த்த புராணத்தில் புதுவைத்தலத்தை முக்தி தரும் க்ஷேத்திரம் என்று குறிப்பிட்டுள்ளது.

வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் என 5 தோ் இழுக்கப்பட்டு வந்தது. தற்போது, தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள் ஆகிய இரு தோ்கள் மட்டும் இழுக்கப்படுகின்றன. 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட அம்மன் தோ் சேதமடைந்ததால் புதிய தோ் செய்ய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது.

உபயதாரா் நிதியில் ரூ.88.30 லட்சத்தில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

வைகாசி திருவிழாவில் வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் புதிய தேரில் சுவாமியும், பழைய தேரில் அம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.