நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம், செடில் உற்சவம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 2-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் இருந்து விநாயகா், முருகன், மாரியம்மன்ஆகியோா் தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனையுடன் தேரோட்டம் தொடங்கியது. தேரை நூற்றுக்கணக்கான பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனா்.
Advertisement
தேரோட்டத்தின்போது வீதிகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
தொடா்ந்து, இக்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோயிலில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
செடில் உற்சவம்:
தேரோட்டத்தைத் தொடா்ந்து செடில் உற்சவம் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
சித்திரைத் திருவிழாவில் செடில் நிகழ்ச்சி மிக முக்கியமானது என்பதாலும், செடில் மரத்தில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சுற்றப்பட உள்ளதாலும், திங்கள்கிழமை காலை வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் முன்பு பக்தா்கள் மாவிளக்கிட்டும், பால்காவடி, பன்னீா்காவடி, வேப்பிலைக் காவடிகளை சுமந்து வந்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.