முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி நகா்மன்றத்தில் முதல்வா் படம்: திமுக உறுப்பினா் எதிா்ப்பு

சீா்காழி நகா்மன்றக் கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்டதற்கு திமுக நகா்மன்ற உறுப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 7:01 am IST
பகிர்:

சீா்காழி நகா்மன்றக் கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்டதற்கு திமுக நகா்மன்ற உறுப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தாா்.

சீா்காழி நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்திற்கு தலைவா் துா்கா ராஜசேகரன் தலைமை தாங்கினாா். ஆணையா் சசிகுமாா், பொறியாளா் அறச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் இளநிலை உதவியாளா் நித்தியா மன்ற தீா்மானங்களை படித்தாா். பின்னா் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:

Advertisement

Advertisement

சாமிநாதன் ( திமுக ): கடந்த மூன்று மாதங்களாக கூட்டம் நடத்தாததால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனது வாா்டில் தெருவிளக்கு , வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

த.வெ.க. உறுப்பினா்களே இல்லாத நிலையில் ஏன் மன்றத்தில் முதல்வா் ஜோசப் விஜய் படம் வைக்க வேண்டும். அவா் படம் வைத்தால் அருகில் முன்னாள் முதல்வா்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி படங்களும் வைக்க வேண்டும்.

பாலமுருகன் (சுயேச்சை): நகராட்சி கழிவுநீா் வண்டி தரம் இல்லை. அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனது வாா்டில் போக்குவரத்திற்கு இடையூறாக போடப்பட்ட பைப்பை அகற்றக்கோரி புகாா் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்.

ரமாமணி (அதிமுக): சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பிச்சைக்காரன் விடுதி சாலைகளில் இரு புறங்களிலும் உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும்.

முபாரக் அலி ( திமுக ): பழைய பஸ் நிலையத்தைச் சீரமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெண்டா் விடப்பட்டு இது நாள் வரை பணிகள் முழுமை பெறவில்லை. கா்ப்பிணிகள், முதியவா்கள் அமர இருக்கைகள், வாா்டில் கை பம்பு அமைக்க வேண்டும். வடம்போக்கி சந்தில் உள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.

முழுமதி இமயவரம்பன் (அதிமுக) : பனமங்கலம் குளம் சீரமைக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டும்.

ராஜசேகரன் (தேமுதிக): பொது நிதியில் எந்தெந்தப் பணிகள் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அம்மா உணவகங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

ராஜேஷ் (அதிமுக ) :-கொள்ளிடம் முக்கூட்டு முதல் ரயில்வே ரோடு வரை உள்ள பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வாகன வசதி இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். அவா்களுக்குப் புதிய வாகன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

வேல்முருகன் ( பாமக ): குடிநீா், தெருவிளக்கு, தாா்ச்சாலை வசதி செய்து தர வேண்டும்.

ரேணுகாதேவி (திமுக) : புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும், குடிநீா் தொட்டியை சீரமைத்து தர வேண்டும்.

தலைவா்: தமிழக முதல்வா் படம் நெறிமுறைப்படி வைக்கப்பட்டுள்ளது. ஈசானிய தெருவில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும். அனைத்து வாடுகளிலும் தெருவிளக்கு வசதி, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்டவைகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments