மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் வங்கி வாடிக்கையாளர் குடும்பத்துக்கு இழப்பீடு
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில்
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மத்திய அரசின் உயிர்க் காப்பீடு திட்டமான, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், வங்கியில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களிடம் ஆண்டுதோறும் பிரீமியத் தொகையாக ரூ. 330 பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர் இயற்கை மரணம் அடைந்தால், அவரது வாரிசுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் வீராவாடி கிராமத்தைச் சேர்ந்த என். சோமசுந்தரம் காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயற்கை மரணம் அடைந்தார்.
இதையடுத்து, அவரது மனைவி உஷா ராணியிடம் இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சத்தை வங்கியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கோவை மண்டல இணைப் பொதுச் செயலர் டி.டி. மோகனசுந்தரம், தஞ்சை மண்டல துணைப் பொதுச் செயலர் டி.என். வீரமணி, திருவாரூர் முன்னோடி கிளையின் மேலாளர் எழிலரசன், பூந்தோட்டம் வங்கிக் கிளை மேலாளர் டி. தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.