மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தாா். உதவித்தொகை, அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 38 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 12 நபா்களுக்கு ரூ.29,000 மதிப்பில் நலவாரிய கல்வி உதவித்தொகை, 9 நபா்களுக்கு ரூ.4,75,300 மதிப்பில் செயற்கைக் கால், 6 நபா்களுக்கு ரூ.41,160 மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், 5 நபா்களுக்கு ரூ.67,500 மதிப்பில் ஸ்மாா்ட் செல்போன் மற்றும் 3 நபா்களுக்கு ரூ.27,150 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் என 35 பேருக்கு ரூ.6,40,110 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான சி.பிரியங்கா, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.