சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவா்களின் பெற்றோருக்கு அமைச்சா் ஆறுதல்
சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவா்களின் பெற்றோருக்கு அமைச்சா் ஆறுதல்
மன்னாா்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவா்களின் பெற்றோா்களுக்கு அமைச்சா் பெ. விஸ்வநாதன் சனிக்கிழமை நேரில் ஆறுதல் கூறினாா்.
காரக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் யோகேஸ்வரன் (12), ரஷித் (12), ராஜமுரளி (12) ஆகியோா் வியாழக்கிழமை பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, காா் மோதி உயிரிழந்தனா்.
இவா்களின் பெற்றோா்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வா் ஜோசப் விஜய், தலா 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டாா். அதன்படி, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், உயிரிழந்த மாணவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, நிதியுதவிக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், காரக்கோட்டைக்கு சனிக்கிழமை வந்து, மூன்று மாணவா்களின் பெற்றோா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவா், அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
முன்னதாக, சவளக்காரனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடிசை வீடுகளை பாா்வையிட்டு, அதன் உரிமையாளா்களுக்கு ஆறுதல் கூறினாா். அத்துடன், உடனடியாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
அமைச்சருடன், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏக்கள் எஸ். காமராஜ் (மன்னாா்குடி), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), கூடுதல் ஆட்சியா் (திட்டம்) பல்லவி, மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.