முகப்பு
புதுதில்லி

தவறான வழித்தடத்தில் மின்சாரம்: தொழிலாளி பலி

துணை மின் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி தவறான வழித்தடத்தில் மின்சார விநியோகத்தை இயக்கியதால்

Updated On : 25 டிசம்பர் 2018, 5:58 am IST
பகிர்:

துணை மின் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி தவறான வழித்தடத்தில் மின்சார விநியோகத்தை இயக்கியதால் 36 வயது தொழிலாளி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த துணைமின் நிலையம் முன்பாக இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: பிகார் மாநிலம், அராரியா பகுதியைச் சேர்ந்தவர் நௌசத் அன்சாரி (36). இவர் அண்மையில் நொய்டா செக்டர் 58-இல் உள்ள காவல் சோதனைச் சாவடி எதிரே உள்ள இடத்தில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று துணை மின் நிலைய அதிகாரி ஒருவர், தவறான வழித்தடத்தில் மின் விநியோகத்தை இயக்கியதால் மின்சாரம் பாய்ந்து அன்சாரி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நௌசத் உறவினர் சுல்தான் கூறுகையில், "கேபிள் பதிப்பது தொடர்பாக ஒரு ஒப்பந்ததாரரின் கீழ் நௌசத் அன்சாரி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கோடாவைச் சுற்றியுள்ள பகுதியில் கேபிள் பதிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை அந்த ஒப்பந்ததாரர் எடுத்திருந்தார். சனிக்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.  அப்போது,  அன்சாரி ஃபீடர் பேனல் எண் 2-இல் குறைபாட்டை கண்டறிவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.  மின் துறையின் மற்றொரு குழுவினர் ஃபீடர் பேனல் எண் 9-இல் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில்,  மின்துறை ஊழியர்கள் ஃபீடர் பேனல் எண்  9-இல் மின்சாரத்தை விநியோகம் செய்யுமாறு துணை மின் நிலையத்தில் இருந்த சார் கோட்ட அதிகாரியிடம் கூறினர். அவர் எண் 9-க்குப் பதிலாக எண் 2-க்கு மின்சாரத்தை விநியோகம் செய்யும் ஸ்விட்சை இயக்கியதால் நௌசத் மின்சாரம் தாக்கி உயிரிழக்க நேரிட்டது' என்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து,  மின்துறை அதிகாரியைக் கண்டித்து செக்டார் 62-இல் உள்ள துணை மின் நிலையம் முன் நௌசத்துடன் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இறந்தவரின் குடும்பத்திற்கு மின்துறையின் காஜியாபாத் கோட்டத்தைச் சேர்ந்த குழுவினர் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை அளித்ததாக கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments