மழை, லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: தில்லியில் காய்கறிகள் விலை உயர்வு!
தேசிய அளவில் மூன்றாவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதாலும், தொடர் மழை காரணமாகவும் தில்லியில் காய்கறிகளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் மூன்றாவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதாலும், தொடர் மழை காரணமாகவும் தில்லியில் காய்கறிகளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.
தில்லி, என்சிஆர் பகுதியிலும், அண்டை மாநிலங்களிலும் பருவமழை காரணமாக இரு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், தில்லிக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன.
இந்நிலையில், லாரிகள் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளதால் தில்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால், தில்லியில் காய்கறிகளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக காய்கறி வணிகர்கள் கூறியதாவது:
தில்லியில் பருவ மழைக் காலங்களில் காய்கறிகளின் விலை பொதுவாக அதிகரிப்பது வழக்கம். தில்லியில் காய்கறி உற்பத்தி பெருமளவில் நடைபெறுவதில்லை. தில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.
தில்லிக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் தினம்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் வருகின்றன. இந்நிலையில், தில்லியிலும் அண்டை மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் லாரிப் போக்குவரத்து கடந்த இரு வாரங்களாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால், தில்லியில் காய்கறிகளின் விலைகள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தொடங்கிய வாரிகள் வேலை நிறுத்தத்தால் தில்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து வருகின்ற காய்கறிகள் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால், தில்லியில் காய்கறிகளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.
தில்லியில் முக்கிய காய்கறி சந்தைகள் நீரில் மூழ்கியிருப்பதால் காய்கறிகள் பழுதடைந்துள்ளன. மேலும், தில்லியின் பல தெருக்கள் நீரில் மூழ்கியிருப்பதால் காய்கறிகளை வீடுகளுக்கே எடுத்துச் சென்று விநியோகிக்கும் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களால் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று காய்கறிகளை விநியோகிக்க முடியவில்லை என்றனர்.
பழங்கள், முட்டை விலையும் அதிகரிப்பு
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது தில்லியில் பழங்களின் விலையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. மாம்பழம், பலாப்பழம், பிளம்ஸ் ஆகிய பழங்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தில்லியில் லாரிப் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதால் முட்டை விலையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் சுமார் ரூ.3.5 க்கு விற்பனையான முட்டையொன்றின் விலை, திங்கள்கிழமை ரூ.5- 7 ஆக அதிகரித்திருந்தது.
தில்லி சந்தைகளில்
காய்கறி விலை நிலவரம் (கிலோவில்)
பெரிய வெங்காயம் ரூ. 40-50
தக்காளி ரூ. 60-80
உருளைக்கிழங்கு ரூ. 40-50
வெண்டைக் காய் ரூ. 44-61
கேரட் ரூ. 45-60
கத்தரிக்காய் ரூ. 35-60
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.