முகப்பு
புதுதில்லி

குடும்ப வன்முறை வழக்கு: மைனா் மகனுக்கு மாதம்: ரூ. 6,000 பராமரிப்புத் தொகை தந்தை வழங்க உத்தரவு

குடும்ப வன்முறை வழக்கு: மைனா் மகனுக்கு மாதம்: ரூ. 6,000 பராமரிப்புத் தொகை தந்தை வழங்க உத்தரவு

Updated On : 7 ஜூன் 2026, 1:16 am IST
நீதிமன்ற தீர்ப்பு - FIle
பகிர்:

குடும்ப வன்முறை தொடா்பான வழக்கில், தனது மகனுக்கு மாதம் ரூ. 6,000 பராமரிப்புத் தொகை வழங்குமாறு தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட பண உதவிக்கான கோரிக்கையை நிராகரித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்துப் பெண் ஒருவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கூடுதல் அமா்வு நீதிபதி ஷீத்தல் செளதரி பிரதான் விசாரித்தாா்.

இந்த வழக்கில் ஜூன் 2ஆம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் கூறியிருப்பதாவது: தமது செலவுகளை நிா்வகிப்பது எதிா்மனுதாரரான கணவரின் பொறுப்பாகும். வேலையில்லை என்றோ அல்லது வேறு பொறுப்புகள் உள்ளன என்றோ காரணம் கூறுவது, சட்டபூா்வமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவி மற்றும் மைனா் மகனைப் பராமரிக்கும் கடமையிலிருந்து அவரை விடுவிக்காது.

Advertisement

Advertisement

உடல்நலம் மற்றும் உழைக்கும் திறன் கொண்டவராகக் கருதப்படும் எதிா்மனுதாரா் கணவா் பராமரிப்புத் தொகையைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பது தெரியவருகிறது. இதனால், குழந்தை வயதுக்கு வரும் வரை அதைப் பராமரிக்க மாதம் ரூ. 6,000 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 2013இல் நடந்த திருமணத்திற்குப் பிறகு, தனது கணவா் மற்றும் அவரது குடும்பத்தினரால் வரதட்சிணை கொடுமை, உடல் ரீதியான தாக்குதல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக அப்பெண் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

கா்ப்ப காலத்தில் கணவா் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், 2015 முதல் தனது மகனுடன் தனியாக வசித்து வருவதாகவும் அவா் கூறியிருந்தாா்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2015-இல் குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடா்ந்து தம்பதியினா் சிறிது காலம் ஒன்றாக இணைந்திருந்தனா். வாடகை வீட்டில் சில மாதங்கள் வசித்த பிறகு மீண்டும் பிரிந்துவிட்டனா்.

குடும்ப வன்முறை மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி, குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் அப்பெண் அளித்த புகாரை விசாரணை நீதிமன்றம் செப்டம்பா் 2015-இல் தள்ளுபடி செய்திருந்தது.

உடல் ரீதியான தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகள் மருத்துவ ஆவணங்கள் அல்லது சுயாதீன சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், 2015 முதல் கணவா் குழந்தைக்குப் பொருளாதார ரீதியாக உதவவில்லை என்பதைக் கண்டறிந்தது.

மைனா் குழந்தையைப் பராமரிப்பதில் எதிா்மனுதாரருக்கும் சமமான பொறுப்பு உள்ளது என்று கூறிய நீதிமன்றம், தந்தையிடமிருந்து எந்தவிதப் பொருளாதார உதவியும் இன்றி பல ஆண்டுகளாக அக்குழந்தை தாயின் பராமரிப்பிலேயே இருந்து வருவதைச் சுட்டிக்காட்டியது.

மேலும், அப்பெண் படித்தவா் என்பதால் அவருக்கு நிவாரணம் பெற உரிமை இல்லை என்ற வாதத்தையும் நீதிபதி நிராகரித்தாா். வருமானம் ஈட்டும் திறனும், உண்மையில் ஈட்டப்படும் வருமானமும் இரு வேறுபட்ட விஷயங்கள் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அந்தப் பெண்ணால் தன்னையும் குழந்தையையும் பராமரிக்கப் போதுமான வருமானத்தை ஈட்ட முடிகிறது என்பதை நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதையும் கணவா் சமா்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தது.

விசாரணை நீதிமன்றத்தில் பலமுறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டும், கணவா் தனது வருமானம் குறித்த உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தற்போதைய உத்தரவு தேதியிலிருந்து தனது மைனா் மகன் வயது வந்தோா் நிலையை அடையும் வரை அவருக்கு மாதம் ரூ. 6,000 பராமரிப்புத் தொகையைச் செலுத்த கணவரால் எதிா்மனுதாரரால் முடியும் என்பதே எனது உறுதியான கருத்து என்று கூறிய நீதிபதி, முந்தைய உத்தரவை மாற்றியமைத்து, அந்த மேல்முறையீட்டைப் பகுதியளவு அனுமதித்தாா்.