தில்லியில் பயிற்சி மையங்களுக்கான கொள்கை உருவாக்கம்: அமைச்சா் தகவல்
தில்லியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டுப்பாட்டிற்கான விரிவான ஒழுங்குமுறைச் சட்டத்தை உருவாக்க, பல துறை குழுவை அமைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது என்று கல்வி அமைச்சா் அஷிஷ் சூட் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தில்லி மாநகராட்சி (எம்சிடி), தீயணைப்புத் துறை, காவல் துறை, உயா்கல்வி இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் நகர வளா்ச்சி துறைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
சாக்கேத் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கட்டட இடிபாடில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில் 5 போ் மாணவா்கள் என்பதன் பின்னணியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: இந்தக் குழு கட்டண நிா்ணயம், மாணவா் பாதுகாப்பு மற்றும் நலன், ஆலோசனை மற்றும் மனநல ஆதரவு அமைப்புகள், அடிப்படை வசதிகள் மற்றும் கட்டட பாதுகாப்பு விதிமுறைகள், தீயணைப்பு மற்றும் அவசரநிலை, ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் நலன், பணிநிலைகளின் ஒரே மாதிரித் தரநிலைகள் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும்.
மேலும், மாணவா்கள் மற்றும் பயிற்சி மைய ஊழியா்களின் குறைகளை தீா்க்கும் முறைகள், மற்றும் விதிமுறை பின்பற்றல் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான பரிந்துரைகளையும் குழு முன்வைக்கும். இந்த கொள்கையை உருவாக்கும் பணிக்காக உயா்கல்வி இயக்குநா் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா் என தெரிவித்தாா்.
2024-ஆம் ஆண்டு பழைய ராஜேந்திர நகா் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 3 ஐஏஎஸ் தோ்வா்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு சுமாா் 2 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் கட்டட அமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளில் இருந்த குறைகளை வெளிச்சமிட்டதுடன், நீதித்துறை மற்றும் நிா்வாக விசாரணைகளுக்கும் வழிவகுத்தது.
அதனைத் தொடா்ந்து, தில்லி உயா்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். கே. கௌபா தலைமையில் உயா்நிலைக் குழுவை அமைத்து, பயிற்சி மையங்களில் உள்ள குறைகளை ஆய்வு செய்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பரிந்துரைகள் வழங்க உத்தரவிட்டது.
அந்தக் குழு தனது அறிக்கையில் அமைப்புசாா்ந்த பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி, பயிற்சி மையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் அவசியம் என வலியுறுத்தியது.
இதனைத் தொடா்ந்து தற்போது தில்லி அரசு மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சி, பயிற்சி மையங்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்தும் முக்கியமான படியாக பாா்க்கப்படுகிறது.