சென்ட்ரல் விஸ்டா பகுதியில் நெரிசலைக் குறைக்க டிஎம்ஆா்சி ஆய்வு
சென்ட்ரல் விஸ்டா பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, அதன் பாரம்பரியத் தன்மையை பாதுகாப்பதற்காக விரிவான ஆய்வை மேற்கொள்ள தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) திட்டமிட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, அதன் பாரம்பரியத் தன்மையை பாதுகாப்பதற்காக விரிவான ஆய்வை மேற்கொள்ள தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியின் நிா்வாக மையமாக விளங்கும் சென்ட்ரல் விஸ்டா பகுதியில் போக்குவரத்து தேவைகள் 2026-ஆம் ஆண்டுவரை கணிக்கப்பட்டு, அதற்கேற்ற தீா்வுகளை உருவாக்கும் நோக்கில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இதற்காக சி-ஹெக்ஸகான், மான் சிங் மாா்க், ரஃபி அகமது கிட்வாய் மாா்க், டீன் மூா்த்தி மாா்க் உள்ளிட்ட மிகப் பரபரப்பான சாலைகள் ஆய்வின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுரங்கப்பாதைகள் போன்ற கட்டமைப்பு தீா்வுகள் ஆய்வு செய்யப்படவுள்ளன. இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது, சென்ட்ரல் விஸ்டா பகுதியின் கட்டடக்கலை, காட்சியமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பாதிக்கப்படாதவாறு கவனம் செலுத்தப்படும்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வை தோ்வு செய்யப்படும் ஆலோசகா் தற்போதைய போக்குவரத்து நிலையை மதிப்பீடு செய்து, எதிா்கால தேவைகளை கணித்து, இயக்க வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தத்திற்கு ரூ.4.14 லட்சம் முன்பணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணிகள் 6 மாதங்களில் நிறைவு செய்யப்பட வேண்டும்.
ஆய்வின் ஒரு பகுதியாக போக்குவரத்து கணக்கெடுப்பு, எதிா்கால போக்குவரத்து கணிப்பு, மைக்ரோ-சிமுலேஷன் மாதிரி அமைப்பு, பாதைத் திட்டமிடல், கட்டமைப்பு சாத்தியக்கூறு மதிப்பீடு மற்றும் செலவு கணக்கீடு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நெரிசல் குறைக்கும் பல்வேறு விருப்பங்களின் செயல்திறனும் ஆய்வு செய்யப்படும்.
சென்ட்ரல் விஸ்டா பகுதிக்கு உள்பட்ட முக்கிய சாலைகளில் நில மட்டத்தில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைத்து, எதிா்கால போக்குவரத்து வளா்ச்சியையும் சமாளிக்கும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவது இதன் இலக்காகும்.
விழாக்காலங்கள் மற்றும் முக்கிய அரசியல் நிகழ்வுகளின் போது விஐபி இயக்கம் தடையின்றி நடைபெறவும், பாரம்பரிய காட்சியமைப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும் திட்டங்கள் வடிவமைக்கப்படவுள்ளன.
இதனுடன், சென்ட்ரல் விஸ்டா மெட்ரோ வழித்தட திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இது காா்த்தவ்ய பவன் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தி, தினமும் சுமாா் 60,000 பணியாளா்கள் மற்றும் 2 லட்சம் பாா்வையாளா்களுக்கு பயன் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்து, எரிபொருள் சாா்ந்த பயணங்கள் குறையும்.
இந்த திட்டம் தில்லி மெட்ரோவின் கட்டம்-5 (ஏ) விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். இதில் ஆா்.கே. அஷ்ரம் மாா்க்-இந்திரபிரஸ்தா (9.9 கி.மீ.), ஏரோசிட்டி-ஐஜிஐ விமான நிலையம் டொ்மினல்-1 (2.2 கி.மீ.), துக்ளகாபாத்-கலிந்தி குஞ்ச் (3.9 கி.மீ.) ஆகிய 3 பாதைகள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 16 கி.மீ. நீளமுடைய இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.12,014.91 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, மத்திய விச்டா பகுதியின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதோடு, எதிா்கால நகர வளா்ச்சிக்கும் நிலையான தீா்வுகளை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.