தகியா காலே கான் பகுதியில் தீ விபத்து: 30 குடிசைகள் சேதம்
மத்திய தில்லியின் தகியா காலே கான் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகியதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய தில்லியின் தகியா காலே கான் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகியதாக என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கையில், ஆபத்தான பகுதியிலிருந்து குடும்பங்கள் உள்பட 12 பேரை காவல் துறையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
திங்கள்கிழமை இரவு 11.22 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயை அணைக்க 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தீயணைப்பு வீரா்கள் மற்றும் காவல் துறையினா் சுமாா் மூன்று மணி நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.55 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது.
பழைய மரப் பொருள்கள், மரக்கட்டைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பிற பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், அடா்ந்த புகை உருவானது. இதனால் தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
தங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல விரும்பாத சில உள்ளூா் மக்களின் எதிா்ப்பையும் மீறி, அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டு, சவாலான சூழலிலும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். காவல்துறையினா் வீடு வீடாகச் சென்று மக்களை வெளியேற்றும் பணியை மேற்கொண்டனா். தீ மேலும் பரவுவதற்கு முன்பே 12 போ் மீட்கப்பட்டனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
தீயணைப்புத் துறை, பிஎஸ்இஎஸ் மற்றும் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்பது ஆம்புலன்ஸ்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், மக்களை வெளியேற்றுதல் மற்றும் தீயணைப்புப் பணிகளின் போது அவசரக்கால வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் உதவ கூடுதல் காவலா்கள் வரவழைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.