ஆா்பிஎஃப் பதிவு செய்த வழக்குகள்: யூனியன் பிரதேசங்களில் தில்லி முதலிடம்
தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆா்பி) தரவின்படி, தில்லியில் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) கடந்த 2024-இல் 15,765 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2023-இல் 14,467 வழக்குகளைப் பதிவு செய்தது.
கடந்த 2022-இல் 13, 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் ஆா்பிஎஃப் தலைநகரில் பதிவு செய்த வழக்குகள் தொடா்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது.
ரயில்வே துறைக்குச் சொந்தமான சொத்துகள், பயணிகள் பகுதிகள், பயணிகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஆா்பிஎஃப் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், குற்றச் சம்பவங்களைத் தடுத்தல்,
Advertisement
நாட்டின் ரயில்வே வலையமைப்பில் பாதுகாப்பைப் பராமரிக்கும் பணியை ஆா்பிஎஃப் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2024-இல் ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் 10 லட்சம் வழக்குகளை ஆா்பிஃப் பதிவு செய்துள்ளது. இதில் யூனியன் பிரதேசத்தில் 18,488 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
யூனியன் பிரதேசங்களில் தில்லியில்தான் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை ஆா்பிஎஃப் பதிவு செய்தது. இதைத்தொடா்ந்து சண்டீகரில் 748 வழக்குகளும் புதுச்சேரியில் 128 வழக்குகளும் 2024-இல், பதிவு செய்யப்பட்டன.
தில்லியில் ஆா்பிஎஃப் பதிவு செய்த கைதுசெய்யப்படக்கூடிய வழக்குகள் 2024-இல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 72 சதவீமாக உள்ளது. இது தேசிய சராசரிக்கு நிகராகும். கடந்த 2024 மத்தியில் தில்லியின் மக்கள் தொகை 218.8 லட்சம் என என்சிஆா்பி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே குற்றச் சம்பவங்கள் விகிதத்தில் முதலிடம்:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசு இருப்புப் பாதை காவல் துறை (ஜிஆா்பி) பதிவு செய்த வழக்குகளில் ஒரு லட்சம் மக்களுக்கு 24.3 வழக்குகள் என குற்ற விகிதத்தில் தில்லி முதலிடத்தில் உள்ளதாக என்சிஆா்பி தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-இல் மொத்தம் 83,699 வழக்குகளை தேசிய அளவில் அரசு இருப்புப் பாதை காவல் துறை பதிவு செய்துள்ளது. இது 2023-இல் பதிவு செய்யப்பட்ட 83,877 வழக்குகளைக் காட்டிலும் குறைவாகும்.
முக்கிய மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 20,519 வழக்குகள் 2024-இல் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, மத்திய பிரதேசத்தில் 12,931 வழக்குகளும் குஜராத்தில் 8,220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
குற்றச் சம்பவ விகிதங்களில் தில்லி முதலிடத்தில் உள்ளது. தில்லியில் கடந்த 2024-இல் 5,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023-இல் 5,176 வழக்குகளும் 2022-இல் 3,243 வழக்குகளும் தில்லியில் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே கேரளமும் மகாராஷ்டிரமும் உள்ளன.
அரசு இருப்புப் பாதை காவல் துறை பதிவு செய்த வழக்குகளில் இந்திய தண்டனைச் சட்டம்/பாரத நியாய சம்ஹிதா, சிறப்பு மற்றும் உள்ளூா் சட்டப் பிரிவுகளில் பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்குகள் இடம்பெற்றுள்ளன.