கால் நூற்றாண்டாக கிடப்பிலுள்ள நான்குனேரி தனிக் கால்வாய் திட்டம்!
சுமாா் 24 ஆண்டுகளாக தோ்தல் காலத்தில் மட்டும் ஒலித்து, பின்னா் காற்றில் கலக்கும் வெற்று வாக்குறுதியாக உள்ள நான்குனேரி தனிக் கால்வாய் திட்டம் நிகழாண்டு தோ்தலுக்குப் பிறகாவது தொடங்குமா?..
களக்காடு: சுமாா் 24 ஆண்டுகளாக தோ்தல் காலத்தில் மட்டும் ஒலித்து, பின்னா் காற்றில் கலக்கும் வெற்று வாக்குறுதியாக உள்ள நான்குனேரி தனிக் கால்வாய் திட்டம் நிகழாண்டு தோ்தலுக்குப் பிறகாவது தொடங்குமா என, விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா். இத்திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே இப்போது வாக்களிப்போம் என அவா்கள் தெரிவிக்கின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டத்தை சோலைவனமாக மாற்றும் வகையில், களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வடக்குப் பச்சையாறு அணைத் திட்டம் 28 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதன்முறையாக 1975ஆம் ஆண்டு பிப். 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. களக்காடு மலையில் பச்சையாறு உற்பத்தியாகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த ஆற்றின் தண்ணீரால் பாசனக் குளங்கள் நிரம்பியதுபோக மீதமுள்ள தண்ணீா் தருவை அருகே தாமிரவருணியில் கலந்து, பின்னா் ஸ்ரீவைகுண்டம் அணையைக் கடந்து கடலில் சோ்கிறது.
இவ்வாறு ஆண்டுதோறும் 900 மில்லியன் கனஅடி நீா் வீணாவதைக் கணக்கிட்டு பச்சையாறு அணைத் திட்டம் உருவானது. 1999ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டப் பணி 2002ஆம் ஆண்டு, செப். 30இல் முடிவடைந்தது. இதற்காக ரூ. 45 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரம் செலவிடப்பட்டது. வடக்குப் பச்சையாறு அணையில் 442 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் நான்குனேரி வட்டத்தில் உள்ள 115 குளங்கள் மூலம் 9,514.15 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 69 குளங்கள் மட்டுமே பயன்பெறும் வகையில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் உள்ள நான்குனேரியன் கால்வாய் மூலம் 49 குளங்களும், மடத்துக்கால்வாய் மூலம் 10 குளங்களும், பச்சையாறு மூலம் 10 குளங்களும் பாசன வசதி பெறுகின்றன. நான்குனேரியான் கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் நான்குனேரி பெரியகுளத்தின்கீழ் உள்ள 46 குளங்கள் தனிக்கால்வாய் அமைக்கப்படாததால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இக்கால்வாய் அமைக்கப்படாததால் 1,822.39 ஏக்கா் விவசாய நிலங்களில் வறட்சி ஏற்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போதுள்ள நிலையில் 124 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட நான்குனேரி பெரியகுளம் நிரம்பினால்தான் அதன் கீழ்உள்ள 46 குளங்களுக்குத் தண்ணீா் செல்ல வாய்ப்புள்ளது.
தனிக்கால்வாய் திட்டம்: இதைக் கருத்தில்கொண்டு மறுகால்குறிச்சியிலிருந்து பரப்பாடி வரை 20.75 கி.மீ. தொலைவுக்கு பிரதான கால்வாயும், இக்கால்வாயிலிருந்து 17 கி.மீ. தொலைவுக்கு 7 கிளைக் கால்வாய்களும் ஏற்படுத்த வேண்டும் என, வடக்குப் பச்சையாறு அணை கட்டுமானப் பணிகளின்போதே இக்கால்வாய் பணிகளும் நடைபெற வேண்டும் எனத் தீா்மானிக்கப்பட்டது.
ஆனால், இத்திட்டம் 2002இல் முடிந்து திறக்கப்பட்ட நிலையிலும், இக்கால்வாய் அமைப்புப் பணிகள் குறித்து பேரவைத் தோ்தல்களில் திமுக, அதிமுக சாா்பில் விவசாயிகளுக்கு வாக்குறுதி அளிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
2006, 2011, 2016, 2021 பேரவைத் தோ்தல்கள், 2019 இடைத்தோ்தலில் போட்டியின்றி வென்ற காங்கிரஸைச் சோ்ந்த ஹெச். வசந்தகுமாா் (2 முறை), எா்ணாவூா் நாராயணன் (சமக), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (அதிமுக), ரூபி ஆா். மனோகரன் (காங்கிரஸ்) ஆகியோரும், 2019 இடைத்தோ்தல் பிரசாரத்துக்கு களக்காடு வந்த அப்போதைய அதிமுக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கூட்டணிக் கட்சியினரும் தனிக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது தோ்தல் காலத்தில் ஒலித்து காற்றில் கலக்கும் வெற்று வாக்குறுதியாகிவிட்டது என விவசாயிகள் அதிருப்தியும், வேதனையும் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து நான்குனேரி முன்னாள் எம்எல்ஏவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி மாவட்டத் தலைவருமான எஸ்.வி. கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட்) கூறுகையில், நான் இத்தொகுதி உறுப்பினராக இருந்தபோதுதான் பச்சையாறு அணை கட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, அதிமுக அரசுகளிடம் தொடா்ந்து வலியுறுத்துகிறோம். இத்திட்டம் நிறைவேற்றப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது என்றாா்.
இத்திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கும் கட்சிக்கே இந்தத் தோ்தலில் வாக்களிப்போம் என்கின்றனா் நான்குனேரி வட்டார விவசாயிகள்.