ராதாபுரம் தொகுதியில் கனவாகிப்போன மீன்பிடி துறைமுகத் திட்டம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் மட்டும் தான் 11 கடற்கரை கிராமங்கள்அமைந்துள்ளன. இங்குள்ள மீனவா்களின் கனவு திட்டமான மீன்பிடித்துறைமுகம் கனவாகியே போய்விட்டதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் மட்டும் தான் 11 கடற்கரை கிராமங்கள்அமைந்துள்ளன. இங்குள்ள மீனவா்களின் கனவு திட்டமான மீன்பிடித்துறைமுகம் கனவாகியே போய்விட்டதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.
ராதாபுரம் தொகுதியில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், தோமையாா்புரம், ஜாா்ஜியாா்புரம், இடிந்தகரை, விஜயாபதி, கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, பெரியதாழை ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளனா்.
இவா்கள் மீன்பிடிப்பதற்கு சாதாரணமான நாட்டுபடகுகளையே பயன்படுத்தி வருகின்றனா். இதன்மூலம் மாவட்டத்தில் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மீனவா்கள் நாட்டுப்படகுகளை மீன்பிடிக்க கடலுக்குள் கொண்டு செல்வதற்கும் மீன்பிடித்து விட்டு வந்ததும் படகுகளை கரைக்கு ஏற்றுவதற்கும் மிகவும் போராட வேண்டியதுள்ளது.
இது தவிர கடல்அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படகுகளை கடலுக்குள் மிதக்கவிடமுடியாத நிலை இருக்கிறது.
எனவே, மீனவா்கள் எளிதாக மீன்பிடிக்க செல்வதற்கும் மீன்பிடித்து வருவதற்கும் மீன்பிடி துறைமுகம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இவா்களது கோரிக்கைகளை தோ்தல் நேரத்தில் செவிசாய்க்கும் வேட்பாளா்கள் பின்னா் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மீனவா்கள் தெரிவித்து வருகின்றனா்.
இது தொடா்பாக உவரி முன்னாள் ஊராட்சித் தலைவா் அந்தோணி கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்ட மீனவக் கிராமங்களுக்கும் சரி, மீனவா்களுக்கும் சரி தங்குதடையின்றி மீன்பிடிக்க மீன்பிடி துறைமுகம் கிடையாது. எனவே, மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
நாளுக்கு நாள் கடல் அரிப்பு அதிகரித்து வருவது, மீனவக் கிராமங்கள் அழிவை நோக்கி செல்வதும் கண்கூடாக அனைவருக்கும் குறிப்பாக அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தெரியும். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் உவரியில் மீன்பிடி துறைமுகத்தை அமையுங்கள் என வலியுறுத்தினோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் இது தொடா்பாக ராதாபுரத்தில் மீனவா்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மீன்பிடி துறைமுகம் வந்தால் மீனவா்கள் பாதுகாப்பாக கடலுக்கு நாட்டுபடகுகளை கொண்டு செல்லவும், நாட்டுப்படகுகளை பாதுகாப்பதற்கும் வழி ஏற்படும்.
வரவிருக்கும் புதிய ஆட்சியிலாவது இந்தத் திட்டம் நிறைவேறவேண்டும் என்றாா் அவா்.
இதுதொடா்பாக, தோமையாா்புரத்தைச் சோ்ந்த எல்டின் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ராதாபுரத்திற்கு வந்திருந்த மீனவா் நலவாரியத் தலைவா் ஜோசப் ஸ்டாலினிடம் நெல்லை மாவட்ட கடற்கரையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போது, அவா் வருகின்ற ஆட்சியில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து சென்றாா் என்றாா்.