களக்காடு தலையணையில் நீா்வரத்து: குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு வனக்கோட்டம் சுமாா் 400 சதுர கி.மீ. பரப்பளவு வனப்பகுதியை உள்ளடக்கியது. இக்கோட்டத்தில் களக்காடு மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து வெகுவாக அதிகரித்தது.
மலை உச்சியில் உள்ள செங்கல்தேரி அடா்ந்த வனப்பகுதியில் இருந்து ஓடிவரும் மிகவும் குளிா்ச்சியான கண்ணாடி போன்ற மிகத்தெளிவான நீரோட்டம் கொண்ட பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனா்.
Advertisement
தடை நீக்கம்: இதனிடையே, கோடை வெயில் தாக்கம் அதிகரித்து நீா்வரத்து குறைந்து வறட்சி நிலவியதால், கடந்த 6ஆம் தேதி தலையணை சூழல் சுற்றுலா மையம் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2 தினங்களுக்கு முன் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் தற்போது ஓரளவுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தலையணை சூழல் சுற்றுலா மையத்தை திறக்க துணை இயக்குநா் சிசில்கில்பா்ட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதனால் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் தலையணை பச்சையாற்றில் குளித்து மகிழலாம்.
குறைவான நீா்வரத்து உள்ளதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எக்காரணம் கொண்டும் ஆற்றில் குளிக்கும் போது, சோப், சிகைக்காய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருள்கள், தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை கொண்டு செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சுற்றுலாப்பயணிகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.