மலைப் பகுதியில் பலத்த மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை
களக்காடு மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பக்தா்கள் கோயிலுக்குச் செல்லவும் வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் களக்காடு மலைப் பகுதியிலுள்ள தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்து, தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் அதிகளவில் பாய்ந்தோடுகிறது. இதனால், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பாா்வையிடவும் தடை விதிக்கப்படுவதாகவும், திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நம்பிகோயில் பகுதியில் சூழல் சுற்றுலாவுக்கும், மலைநம்பி கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கும் வியாழக்கிழமைமுதல் (ஜூன் 4) மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்படுவதாக, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் களக்காடு வனக்கோட்ட துணை இயக்குநா் சிசில் கில்பா்ட் தெரிவித்துள்ளாா்.
நீா்வரத்து குறைந்ததும் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என, வனச் சரகா்கள் பிரபாகரன் (களக்காடு), யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி) ஆகியோா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement