ரப்பர் ஒட்டுப்பால் இறக்குமதிக்கு அனுமதியா? குமரியில் ரப்பர் வணிகர்கள் இன்று கடையடைப்பு
வெளிநாடுகளிலிருந்து ரப்பர் ஒட்டுப்பால் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தைத் எதிர்த்து, குமரி மாவட்டத்தில்
வெளிநாடுகளிலிருந்து ரப்பர் ஒட்டுப்பால் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தைத் எதிர்த்து, குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்துகின்றனர்.
வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பிரோ ஆப் இந்தியன் ஸ்டான்டர்ஸ் பி.எஸ்.எஸ். தர முத்திரை கொண்ட கச்சா ரப்பரை மட்டுமே இதுவரை இறக்குமதி செய்யமுடியும். இதன்படி ஐ.எஸ்.என்.ஆர். வகை ரப்பர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.3 தரம் கொண்ட ரப்பர் மட்டுமே இறக்குமதியாகி வந்தன.
இந்நிலையில் முக்கிய ரப்பர் உற்பத்தி நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ரப்பர் மரங்களிலிருந்து வடிக்கப்படும் ஒட்டுப்பால் (கப் லம்ப்) எனப்படும் ரப்பரை பீரோ ஆப் இந்தியன் ஸ்டான்டர்ஸ் (பி.ஐ.எஸ்.) தரத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் கிலோவிற்கு ரூ. 40-க்கு விற்பனையாகும் இந்த ஒட்டுப்பால் இந்தியாவில் வரிகள் உள்பட சுமார் ரூ. 48-க்கு இறக்குமதி செய்திட முடியும். விலை குறைவாகக் கிடைப்பதால் இந்திய ரப்பர் ஆலைகள் இதனையே அதிக அளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தும்.
இதனால், இந்திய ரப்பர் சந்தையில் ரப்பரின் விலை குறிப்பாக ஷீட் ரப்பரின் விலை கடுமையாகச் சரிந்து கிலோ ரூ. 50 என்ற வீழ்ச்சியை எட்டிவிடும் என ரப்பர் விவசாயிகளும், ரப்பர் வணிகர்களும் அஞ்சுகின்றனர். இந்த விஷயங்கள் கேரள விவசாயிகள் மற்றும் வணிகர்களிடம் மட்டுமன்றி அரசியல் தளத்திலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. குமரி மாவட்டத்திலும் ரப்பர் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காரணமாக அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்று கடையடைப்பு: இந்நிலையில், அகில இந்திய அளவில் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து ரப்பர் வணிகர்கள் வியாழக்கிழமை (ஏப். 5) கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதில், குமரி மாவட்ட ரப்பர் வணிகர்களும் பங்கேற்று கடையடைப்பு நடத்துகின்றனர். மேலும், மார்த்தாண்டத்திலுள்ள ரப்பர் வாரிய அலுவலத்தில் ரப்பர் வணிகர்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து சென்று மத்திய அரசின் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என மனு அளிக்கின்றனர்.
இது குறித்து குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கச் செயலர் சி. பாலசந்திரன் நாயர் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வரவுள்ள இத்திட்டத்தால், குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகளும், வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இங்குள்ள பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, மத்திய அரசின் புதிய திட்டத்தைக் கைவிட வேண்டும். இதை விலியுறுத்தி கடையடைப்பு செய்வதுடன், மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அலுவலகத்தில் மனுவும் அளிக்கவுள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.