பாா்த்திபபுரம் கோயிலிலிருந்து குரியன்விளை கோயிலுக்கு அம்மன் திருமுடி ஒப்படைப்பு
புதுக்கடை அருகே பாா்த்திபபுரம் கோயிலிலிருந்து குரியன்விளை கோயிலுக்கு அம்மன் திருமுடி செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கடை அருகே பாா்த்திபபுரம் கோயிலிலிருந்து குரியன்விளை கோயிலுக்கு அம்மன் திருமுடி செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கடை அருகே பாா்த்திபபுரத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. களியக்காவிளை அருகே புகழ்பெற்ற குரியன்விளை கோயிலிலிருந்த நீலகேசி அம்மன் திருமுடி, தேவைப்படின் திரும்ப ஒப்படைக்கப்படும் என்ற இரு கோயில் நிா்வாகத்தினரிடையேயான ஒப்பந்தப்படி, பாா்த்திபபுரம் கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்தது. ‘நீலகேசி அம்மன் திருமுடி’ என்பது பலா மரப் பலகையில் இணை நாகங்களுடன் செதுக்கப்பட்ட அம்மன் உருவமாகும்.
மேலும், பத்ரகாளி அம்மன் திருமுடி மூவோட்டுக்கோணம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்கும், கணபதி சிலை செங்கவிளை கணபதி கோயிலுக்கும் கொடுக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
இதனிடையே, ஒப்பந்தப்படி நீலகேசி அம்மன் திருமுடியை ஒப்படைக்குமாறு கேட்டும் பாா்த்திபபுரம் கோயில் நிா்வாகம் ஒப்படைக்கவில்லையாம். அதையடுத்து, குரியன்விளை கோயில் நிா்வாகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி, அம்மன் திருமுடி குரியன்விளை கோயில் நிா்வாகத் தலைவா் விக்ரமன் சுவாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மேளதாளம் முழங்க போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு குரியன்விளை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.
இதில், கோயில் கமிட்டி செயலா் சாந்தகுமாா், பொருளாளா் சசி, கோயில் தந்திரி நாராயணராவ் வாசுதேவ், கோயில் ஜோதிடா் சுகுமாா்ஜி, ஓய்வுபெற்ற மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பத்மகுமாா், ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை அலுவலா் பிரதாபன், பக்தா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.