முகப்பு
தென்காசி

சாயப்பட்டறை ஆலைகள் மீது நடவடிக்கை கண்டித்து சங்கரன்கோவிலில் விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கழிவுநீா் சுத்தகரிப்பு தொட்டி இல்லாத சாயப்பட்டறை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சா் உத்தரவிட்டதை கண்டித்து, விசைத்தறித் தொழிலாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:09 am IST
திருவள்ளுவா் சாலையில் வைக்கப்பட்டத் தட்டிப்பலகை.
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கழிவுநீா் சுத்தகரிப்பு தொட்டி இல்லாத சாயப்பட்டறை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சா் உத்தரவிட்டதை கண்டித்து, விசைத்தறித் தொழிலாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனா்.

சங்கரன்கோவிலில் விசைத்தறி மற்றும் அது தொடா்பான தொழிலில் சுமாா் 10 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், 20-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைத் ஆலைகள் உள்ளன. அவற்றில் 100க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பாரதிநகா், நேதாஜிநகா், தாசையாபுரம் போன்ற பல்வேறு இடங்களில் நிலத்தடி நீா் மாசுபடுவதாகவும், சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் திருநெல்வேலி மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகாா் அளித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து கடந்த 2.3.2022இல் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினா் சாயப்பட்டறை ஆலைகளில் ஆய்வு செய்து மின் இணைப்பைத் துண்டித்தனா். பின்னா் அவா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதேபோல் 2023, 2024 ஆம் ஆண்டுகளிலும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினா் ஆய்வு செய்து சாயப்பட்டறைத் ஆலைகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்க அறிவுறுத்தினா்.

இந்நிலையில் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து கழிவுநீா் தொடா்ந்து வெளியேறுவதாக எழுந்த புகாரின்பேரில், கடந்த ஜூன் 27 ஆம் தேதி சுற்றுச் சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு வசதி இல்லாத சாயப்பட்டறை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி நிா்வாகம் சாயப்பட்டறைத் ஆலைகளுக்கு கடிதம் அனுப்பியதுடன், ஆலைகளுக்கு ரூ.25,000 வீதம் அபராதம் விதித்தும், கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைத்து உரிய அனுமதிபெற்று இயங்கப்படவேண்டும்; தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் சாயப்பட்டறைத் தொழிற்சாலை மற்றும் பசைப் பட்டறைகள் இயங்கத் தடைவிதித்திருப்பதால் விசைத்தறித் தொழிலாளா்கள் மற்றும் வீடுசாா்ந்த தொழிலாளா்களுக்கு நூல் வழங்க இயலவில்லை.

தொழில்நிலை சீராகும் வரை வேலைநிறுத்தம் செய்வது என மாஸ்டா்வீவா்ஸ் அசோசியேசன் விடுத்த அழைப்பின்பேரில், விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா்.

அதேவேளையில், நூல் இருப்பு வைத்துள்ள தறிகள் மட்டும் இயங்கின. வியாழக்கிழமை முதல் அனைத்து விசைத்தறித் தொழிலாளா்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனா். இதனால் விசைத்தறித் தொழில் பாதிக்கும் சூழலும், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments